முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், சாமானிய மக்களுக்கான ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும்தான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு” என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ், முந்தைய காலங்களில், “தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதன் மூலம், ஏழைகள் தொடர்வண்டிகளில் பயணிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது, “மத்திய பா.ஜ.க அரசு, ‘வந்தே பாரத்’ மட்டும்தான் ரயில் என்பதைப் போலவும், மற்ற ரயில்கள் எல்லாம் ஆடு மாடுகளை ஏற்றிச் செல்லக்கூடிய வண்டிகள் போலவும் கருதுகிறது. அதனால்தான், வந்தே பாரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற ரயில்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு ரயில் நிலையமாக ஓடி ஓடிச் சென்று வந்தே பாரத் ரயிலைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயிலின் பெருமைகளையும், புல்லட் ரயில் திட்டம் பற்றியும் மட்டும்தான் பேசுகிறாரே தவிர, சாமானியர்கள் பயணிக்கும் ரயில்கள் குறித்து ஒருபோதும் பேசுவது கிடையாது” என்று குமுறுகிறார்கள்.