தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சி.நல்லா கவுண்டரிடம் பேசியபோது, “இந்த ஊக்கத்தொகை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றாது. காரணம் தேர்தல் அறிக்கையில் சொன்னதைகூட செயல்படுத்த முடியாத அரசாக இருந்து வருகிறது. விவசாயிகளை கலந்தாலோசித்து இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடவில்லை.
அவர்களுக்குரிய அதிகாரிகளிடம் மட்டுமே கலந்தோலோசித்து ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வெளி மார்க்கெட்டிலேயே 1 கிலோ நெல் 30 ரூபாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதைவிட கூடுதலாக அறிவித்தால்தான் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 2,450 ரூபாயை வைத்து விவசாயிகள் என்ன செய்ய முடியும். விவசாயத்துக்கு ஒருநாள் ஆண் கூலியாள்களுக்கு 1000 ரூபாய், பெண் கூலியாள்களுக்கு 500 ரூபாய். இவ்வளவு கொடுத்தாலும் ஆள்கள் வருவதில்லை. விவசாயமே செய்ய முடியவில்லை என்று பல விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் உணர்ந்துதான் தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தியிருக்க வேண்டும். நம்மை விட பின்தங்கிய மாநிலங்களெல்லாம் நெல் விலையை 3,000 ரூபாய்க்கு உயர்த்தியிருக்கின்றன. தமிழக அரசு இப்படியென்றால், மத்தியிலுள்ள மோடி அரசு இதைவிட மோசமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 2014-ல் மோடி பிரதமராக வந்தபோது ஒரு குவிண்டால் நெல் 1,310 ரூபாய் இருந்தது. அதை 2,320 ரூபாயாக உயர்த்தியிருக்கிறேன் என்று மார்தட்டுகிறார், பிரதமர் மோடி. 10 ஆண்டுகளில் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது, நெல் உற்பத்தி செலவு எவ்வளவு கூடியிருக்கிறது என்பதை அறிவாரா மோடி? மொத்தத்தில் இந்த ஊக்கத்தொகை எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயனளிக்க போவதில்லை” என்றார்.