`மேக்கேதாட்டூ அணை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்” என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில், `பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்வது தற்கொலைக்குச் சமம்’ என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கொடுத்திருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ அணையை எப்படியும் கட்டியேத் தீரவேண்டும் என விடாப்பிடியாக முயற்சி செய்துவருகிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இந்த நிலையில், கடந்த ஜூலை 29-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மேக்கேதாட்டூ அணை கட்டுவது சம்பந்தமாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், தமிழ்நாடு அரசு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இருப்பினும் மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மேக்கேதாட்டூ அணையை கட்டி முடித்துவிடுவோம்!” என்றார்.
மேலும், “மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை. ஆனால், தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் பிரச்னை கிளப்பிவருகிறது. கர்நாடகா திறந்துவிடும் காவிரி உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பிவிடுகிறது, மற்ற உபரிநீர் அனைத்தும் கடலுக்குச் சென்றுவிடுகிறது. இதுவே மேக்கேதாட்டூவில் அணை கட்டினால் அந்த உபரிநீரையும் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் கொண்டுசெல்லலாம். அதேசமயம் நீர் பற்றாக்குறை காலத்தில் தமிழ்நாட்டுக்கும் திறந்துவிடலாம். இது கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கும் பயன்படும். ஆனால், அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது!” என அக்கரையாக(!) குற்றம்சாட்டினார்.