தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், யானை வழித்தடங்கள் மற்றும் ஈஷா யோகா மையம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மழுப்பும் வகையில் பதிலளித்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
முன்னதாக, இன்றைய கூட்டத்தில் துறைசார்ந்து எழுந்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், “சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், யானை வழித்தடங்களை அடையாளம் காண்பதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. முனைவர் ராமன் சுகுமாரால், சிறப்புக் குழுவின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வனத்துறையில் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்ட பின்பு, யானைகள் நடமாட்டமுள்ள மாவட்டங்கள் வாரியாக அந்தந்த யானை வழித்தடங்கள் குறித்த விவரங்களை மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் விளக்கி மக்களின் கருத்துகள் தொகுக்கப்படும். அதனடிப்படையில் இறுதி அறிக்கை சிறப்பு குழுவால் முடிவுசெய்யப்பட்டது பின்னர் அரசின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
அப்போது, சபாநாயகர் அனுமதியோடு குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் மௌலானா, `யானைகள் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு சாலைகள், கட்டடங்கள் அமைப்பதாகவும், கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும்’ கூறினார்.
அதற்கு, “யானை வழித்தடங்கள் குறித்த முழு அறிவு இப்போதைக்கு யாருக்கும் கிடையாது. அதனால், முதலமைச்சரால் யானை ஆராய்ச்சியாளர்களை வைத்து ஆய்வுசெய்த பிறகு முடிவெடுக்கப்படும்” என்று மதிவேந்தன் பதிலளித்தார்.
அவரைத்தொடர்ந்து, அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், “அரசின் அனுமதி பெற்றுதான் ஈஷா அந்த இடங்களைப் பிடித்திருக்கிறதா… யானை வழித்தடங்களை மறைத்திருப்பது உண்மையா என்று நேரடியான பதில் கேட்கிறார் (ஹசன் மௌலானா)” என்றார்.
பின்னர் மீண்டும் விளக்கமளித்த மதிவேந்தன், “ஈஷா பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகுதான் நான் சொல்ல முடியும். எதுவும் தெரியாமல் அரைகுறையாக நான் சொல்லக் கூடாது. ஆய்வுக்குப் பிறகு அதில் அவர்கள் விதிமீறல்கள் செய்திருக்கிறார்களா, தேவையான அனுமதி வாங்கியிருக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு அதற்கான விளக்கங்களைத் தருகிறேன்.
அதற்கும், “நீங்கள் பதவியேற்று மூன்றாண்டுகாலம் ஆகிவிட்டது. இதுவரையிலும் நீங்கள் ஆய்வுசெய்யவில்லையா என்று அவர் கேட்கிறார்” என்று துரைமுருகன் கூற, போதும் என சபாநாயகர் அப்பாவு நிறுத்திவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88