அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த இடத்திற்கு வருவதற்கும் தகுதி இருக்கிறது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வார்டுகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், ஊரக மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு மேடையில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை, செயல் திட்டங்களாக மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக தம்பி உதயநிதி உழைத்துக் கொண்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டலினுக்கு தகுதி இருக்கிறது. எந்த இடத்திற்கும் வருவதற்கும் அவர்களுக்கு தகுதி இருக்கிறது. இளைஞர் அணி செயலாளர் எந்த உயரத்திற்கும் வரலாம்.
இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்காக கடைசி தொண்டன் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் இயக்கம் திமுக. எந்த அளவுக்கு உழைத்திருந்தார்கள் என்று பார்த்தால் பல ஆண்டுகளாக இளைஞர் அணி, விளையாட்டுத்துறை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : சங்கர் (திண்டுக்கல்)
.