அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் மட்டும், 2023-ம் ஆண்டு முழுவதும் விற்பனையான பிரதிகளுக்கு ஈடான அளவில் பிரதிகள் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது 5,000 மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாகவும், தற்போது ஸ்டாக் தீர்ந்துவிட்டதால் அடுத்த பதிப்பு இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 செ.மீ நீளம், 10.8 செ.மீ அகலம், 2.1 செ.மீ தடிமன் கொண்ட இந்த புத்தகத்தை 2009 முதல் ஈஸ்டர்ன் புக் கம்பெனி வெளியிட்டுவருகிறது. இதுவரை 16 பதிப்புகள் வெளியாகியிருக்கிறது.
இந்த புத்தகத்தின் முன்னுரையை எழுதியிருக்கும் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.கே.வேணுகோபால், “வழக்கறிஞராக, நீதிபதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொரு இந்தியரும் இந்தச் சிறிய புத்தகத்தின் பிரதியை வைத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அளவில் அது சிறியதாக இருந்தாலும் மனித பரிமாணங்களில் பெரியது. எனவே, இந்த புத்தகம் ஒவ்வொரு இந்தியரின் பாக்கெட்டுகளிலும் இருக்கவேண்டும். இந்திய அரசியலமைப்பிலுள்ள கருத்துகளின் மகத்துவத்திலிருந்து உத்வேகம் பெற அவர்களுக்கு இது உதவுகிறது” என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.