ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டைத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்குச் சொந்தமான ஏறக்குறைய அரை ஏக்கர் நிலம், திண்டிவனம் – நகரி இடையிலான ரயில் பாதைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. நில மதிப்பீட்டுத் தொகையாக ரூ.6.27 லட்சம் கோவிந்தராஜிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், `உயில்’ பத்திரத்தை கேட்டு ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்படும் நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்தை அணுகியபோது… `பத்திரம் வேண்டுமானால் நில மதிப்பீட்டுத் தொகையில் இருந்து 1 சதவிகதத்தை கமிஷனாக தர வேண்டும்’ என்று தாசில்தார் மதிவாணன் லஞ்சம் கேட்டிருக்கிறார். அதாவது, ரூ.6,000 லஞ்சம் கேட்டிருக்கிறார்.
`என் நிலத்துக்கு நானே லஞ்சம் தரணுமா..?’ என்று கேள்வியெழுப்பிய கோவிந்தராஜ், ரூ.4,000 தருவதாக கூறியபோதும், விடாபிடியாக பேரம் பேசி… அவரை 31-ம் தேதி வரச்சொல்லி காலம் தாழ்த்தி இழுத்தடித்திருக்கிறார் தாசில்தார் மதிவாணன். லஞ்சம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாரளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய நான்காயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜிடம் போலீஸார் கொடுத்தனுப்பினர். அவரும் இன்றைய தினம் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று தாசில்தாரைச் சந்தித்தார். அப்போது, லஞ்சப் பணத்தை கையில் வாங்கிய தாசில்தார் மதிவாணனை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, அலுவலகத்தின் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு தாசில்தார் மதிவாணனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.