“ரெண்டு பேரும் ஹெல்மெட் போட்டிருக்கோம். ஆர்சி, இன்ஷூரன்ஸ் எல்லாமே பக்காவா இருக்கு! எதுக்கு சார் ஃபைன் போடுறீங்க?” – சென்னையின் ஒரு முக்கியமான சிக்னலில் ஒருவர் இப்படி காவல்துறை அதிகாரியிடம் வாதாடிக் கொண்டிருந்தார்.
கடைசியில் அபராதம் கட்டிய பிறகுதான் அவர் இந்த இடத்தைவிட்டுக் கிளம்பியிருந்தார். அதற்குக் காரணம் – அந்த பைக்கின் நம்பர் ப்ளேட். அது நம்பர் ப்ளேட் மாதிரி இல்லாமல், குழந்தையின் ஸ்லேட் மாதிரி கன்னாபின்னாவென கிறுக்கப்பட்டிருந்தது.
Defective Number Plate என்கிற குற்றத்தின் கீழ் அவருக்குக் கீழ் அபராதம் வழங்கப்பட்டிருந்தது. ஹெல்மெட், ஆர்சி புக், இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் என்று பக்காவாக இருக்கும் பலர், நம்பர் ப்ளேட் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுக்குத் தெரியுமா? வாகனத்தின் நம்பர் ப்ளேட்டுக்குக் கூட ஓர் அளவுகோல் இருக்கிறது. ஆம், பைக் மற்றும் ஆட்டோக்களுக்கு நம்பர் ப்ளேட் 200 X 100 மிமீ அளவில் இருக்க வேண்டும். இதுவே கார்களுக்கு, இலகுரக வாகனங்களுக்கு, பயணிகள் வாகனங்களுக்கு 340 X 200 மிமீ அல்லது 500 X 120 மிமீ; நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 340 X 200 வரை இருக்க வேண்டும் என்பதுதான் விதி.
நீங்கள் கார், பைக் வாங்கும்போது நம்பர் ப்ளேட்டில் கவனம் செலுத்தத் தேவையில்லை. ஆட்டோமொபைல் நிறுவனங்களே இதை எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில்தான் சேர்க்கின்றன. சிலர் வாகனங்கள் வாங்கியபிறகு மாடிஃபிகேஷன் என்கிற பெயரில் நம்பர் ப்ளேட்டிலும் கை வைக்கிறார்கள். இதுதான் தவறு!
இன்னும் சிலர் நம்பர் ப்ளேட்களில் பிடித்த ஹீரோக்களின் படங்கள் வைத்திருப்பார்கள். இதுவும் சட்டப்படி தவறு. அதேபோல், நம்பர் ப்ளேட்டில் வாகனப் பதிவு எண்ணைத் தவிர வேறெந்த ஸ்டிக்கர்களும், எழுத்துகளும், மெசேஜ்களும் இருந்தாலும் தப்பு. நம்பர் பிளேட் வளைந்திருந்தால்… துருப்பிடித்திருந்தால்… டேமேஜ் ஆகியிருந்தால்… அதற்கும் அபராதம் உண்டு.
இப்போது சென்னை டிராஃபிக் போலீஸுக்கான எக்ஸ் வலைதளத்தில் சிலர், தவறான வாகனங்களின் நம்பர் ப்ளேட்டைப் படம் எடுத்துப் பதிவு செய்கிறார்கள். அது காவல்துறையின் கவனத்துக்குப் போய் அபராதம் விதிக்கத் துவங்குவதும் உண்டு. ஒரு பல்ஸர் பைக்கின் நம்பர் ப்ளேட்டில் நடிகர் விஜய் படம் இருந்ததைப் படம் எடுத்து ஒருவர் பதிவிட, அந்த பல்ஸர் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சரி… எதற்காக இந்தக் கடுமையான சட்டம்? காரணம் உண்டு. குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களை அதன் நம்பர் ப்ளேட்டை வைத்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டு, பெரும்பான்மையான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. மேலும் தகடுகள் அல்லாமல் சிலர் ஃபைபர் போன்ற பிளாஸ்டிக்கிலும் நம்பர் ப்ளேட்டுகள் வைப்பதால், அது சாலைகளில் உள்ள ANPR கேமராக்களில் பதிவு செய்யப்படுவதில் சிக்கல் இருக்கும். நம்பர் தவிர வேறு சில உருக்கள், எழுத்துகள் இருந்தால் அதைப் படம் பிடிப்பதிலும் சிரமம் இருக்கும். இதனால்தான் இந்தச் சட்டம்!
எனவே, நம்பர் ப்ளேட்டுகளில் Press, Advocate, Doctor, Press, Police போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். நம்பர் ப்ளேட்டிலும் கொஞ்சம் கவனம் வையுங்கள்!