வங்கதேச கலவரம்… ஷேக் ஹசீனா கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்பு!

வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 33 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதன் பின்னணியில் ஷேக் ஹசீனா அரசுக்கெதிராக தேசிய அளவில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தைத் தடுக்க ஷேக் ஹசீனா அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஒரு கட்டத்தில் மாணவர்கள் போராட்டம் கலவரமாக வெடித்தது.

வங்கதேசம் – கலவரம் – ஷேக் ஹசீனா

இதில் கொத்து கொத்தாக மாணவர்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் போராட்டம் தொடர்ந்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாகக் குறைக்கவே போராட்டம் சற்று தணிந்தது. இருப்பினும், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்கு பதிலளிக்கும் வகையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென்று திங்களன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முன்னேறினர். இதையறிந்த, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து, ஷேக் ஹசீனா தங்கியிருந்த அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. மேலும், அவரது அவாமி லீக் கட்சியின் எம்.பி-க்கள், நிர்வாகிகளின் வீடுகள், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன மற்றும் தீயில் எரிந்தன . இந்த நிலையில், அவாமி லீக் தலைவர்கள் அவர்களின் குடும்பத்தினர் என நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

வங்கதேசம் – கலவரம்

இதுகுறித்து வெளியான தகவலின்படி, சத்கிராவில் நடந்த கலவரத்தில் குறைந்தது 10 பேரும், கொமிலாவில் நடந்த தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அசோக்தலாவிலுள்ள முன்னாள் கவுன்சிலர் எம்.டி.ஷா ஆலமின் மூன்று மாடி வீடு ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ஐந்து இளைஞர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதேபோல், நாடூர்-2 தொகுதியின் எம்.பி ஷஃபிகுல் இஸ்லாம் ஷிமுல் என்பவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசம் – கலவரம்

அதோடு, லால்மோனிர்ஹாட்டில் அவாமி லீக் கட்சியின் மாவட்ட இணைப் பொதுச் செயலாளர் சுமன் கானின் எரிக்கப்பட்ட வீட்டிலிருந்து 6 சடலங்களை உள்ளூர்வாசிகள் மீட்டிருக்கின்றனர். இவ்வாறாக, திங்களன்று நடந்த பெரிய கலவரத்தின் பாதிப்புகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. இப்படியான சூழலில், வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் நாளை பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *