நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். முன்னதாக கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு உறுதிமொழியை விஜய் வாசிக்கத் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.
பிறகு பேசிய விஜய், “விரைவில் கட்சியின் மாநாடு நடைபெறும். அதில் கட்சியின் கொள்கைகள் மட்டுமின்றி கட்சிக் கொடிக்கான விளக்கம் என்ன என்பதையும் அறிவிக்கப்படும். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி வரும் காலங்களில் ஒரு கட்சியாக நம்மைத் தயார் செய்துகொண்டு, தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம். நான் இதை வெறும் கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறையினரின் வெற்றிக்கான கொடியாகத்தான் பார்க்கிறேன்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பட்டையில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன. நடுவில் ஒரு சிவப்பு நிற வட்டம் உள்ளது. அதற்குள் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. மொத்தமாக 28 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளது. இவை என்னென்ன விஷயங்களைக் குறிக்கின்றன என்கிற கேள்வியுடன் த.வெ.க சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “கொடியில் இருக்கும் சிவப்பு நிறம் தொழிலாளர்களைக் குறிக்கிறது. மஞ்சள் மங்களகரத்தைச் சொல்கிறது. இரண்டு யானைகளும் போருக்குத் தயாராக இருப்பதைக் குறிக்கின்றன. அதாவது மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தலைவர் தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. வாகை மலர் வெற்றியைக் குறிக்கிறது. விஜய்தான் வெற்றி. வெற்றிதான் விஜய். 28 நட்சத்திரங்களும் கட்சியின் 28 கொள்கைகளைக் குறிக்கின்றன” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் துரை.கருணா, “2026 தேர்தலில் விஜய் அடித்தளம் மட்டுமே அமைக்க முடியும் என நினைக்கிறேன். இளைஞர்களின் ஆதரவு இருப்பதால் விஜயகாந்த் போல 8% வாக்குகளை வேண்டுமானால் பெறலாம். ஆனால் சரியான களப்பணி செய்தால், மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தால் கட்சி வளரும். அப்போது அடுத்து வரும் தேர்தலில் குறிப்பிட்ட இடத்தை பெறலாம்.
ஆனால் வலிமையான கட்டமைப்பு கொண்ட தி.மு.க, அ.தி.மு.க களத்தில் இருப்பதை விஜய் உணர வேண்டும். ஏனெனில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களால் கூட திராவிட இயக்கங்களிடம் வெற்றிபெற முடியவில்லை. இதேபோல் சிவாஜி, பாக்கிய ராஜ், சரத்குமார் போன்ற திரை பிரபலங்களும் சாதிக்க முடியவில்லை. கமல் கூட திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். ரஜினி தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இப்போதைய அரசியல் அணுகுமுறை அவ்வளவு எளிதானது இல்லை.இதையெல்லாம் விஜய் எதிர்கொள்வரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் திமுகவை ஆரம்பித்து 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் அண்ணாவால் கூட்டணி ஆட்சி அமைக்க முடிந்தது. இதற்கு அவருடன் நாவலர், கருணாநிதி என பெரும் அரசியல் ஆளுமைகள் இருந்தார்கள். ஆனாலும் வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. இதையெல்லாம் விஜய் உணர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88