நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதன் மூலம் மீண்டும் ஒரு தேர்தல் பரபரப்புக்குத் தயாராகியுள்ளது தமிழ்நாடு. ஜூன் 14-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறும் எனவும் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசி நாள் எனவும் அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஜூலை 10-ம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவித்துள்ளது. இன்னும் நான்கு நாள்கள்வே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளதோடு தேர்தல் பணிக்குழுவும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காணை மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு, விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர். காணை வடக்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு அமைச்சர் சி.வி.கணேசனும், காணை தெற்கு ஓன்றியத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் எம்.எல்.ஏ லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தேர்தல்களை போல இந்தத் தேர்தலிலும் தி.மு.க-தான் ஒருபடி முன்னே நிற்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஏனைய பிரதான கட்சிகளும் அதன் கூட்டணியும் என்ன முடிவில் இருக்கின்றன என்ற விசாரணையில் இறங்கினோம். குறிப்பாக அதிமுக-வும் பாஜகவும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரும் சைலன்ட் மோடுலேயே இருக்கிறார்கள்.
“விழுப்புரம் மாவட்ட முன்னாள் சீனியர் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில்தான் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனையில் ஈடுப்பாட்டார். அப்போது இந்தத் தேர்தலில் போட்டியிடலாம் என்றே முடிவு செய்திருக்கிறோம். அதுவும் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஒன்றிய செயலாளருமான முத்தமிழ்செல்வனையே நிறுத்தலாம் எனவும் முடிவெடுத்திருக்கிறது. அவரின் பெயரைத்தான் தலைமைக்கும் பரிந்துரை செய்து அனுப்பி வைத்திருக்கிறோம். தலைமை என்ன முடிவு எடுக்கிறது எனப் பார்ப்போம்” என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள்.
மேலும் தொடர்ந்தவர்கள், “இப்போதைக்கு நேரம் சரியில்லை என்பதால் வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்” எனவும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பா.ஜ.க – பா.ம.க கூட்டணியினரோடு பேசினோம்… இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டவுடனே பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்” எனச் சொல்ல, தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் பா.ம.க தன்னிச்சையாக எப்படி இதைச் சொல்லலாம் என பா.ஜ.க-வினர் சிலர் பொங்கினார்களாம். தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், “பா.ஜ.க. தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டதுபோல, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்” என பா.ஜ.க தரப்பில் சில வெளியே பேச தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் அன்புமணி ராமதாஸ், “கூட்டணிக் கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்போம்” எனவும் சொல்லியிருக்கிறார். இதனால், பா.ம.க – பா.ஜ.க இடையே மோதல் வெடிக்கும் சூழலில் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், இறுதியில் பா.ம.க-தான் இந்தத் தேர்தலில் போட்டியிடும் என்கிறார்கள். பாஜக ஆதரவு தெரிவிக்கும் சூழல் தான் உள்ளது. எப்படியும் நாம் தமிழரும் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் சூழலில் அவர்களும் வேட்பாளரைக் களம் இறக்குவார்கள். எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படியும் நான்குமுனைப் போட்டியாகவே இருக்கும்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மீண்டும் கொஞ்ச காலத்துக்கு அரசியல் களம் சூடாக இருக்கும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88