விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,24,053 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
நடந்துமுடிந்த இந்த தேர்தலில் பா.ம.க தோல்வியைத் தழுவிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றிய கூட்டணிக் கட்சிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி.
தி.மு.க இந்த தேர்தலில் ரூ.250 கோடி செலவு செய்திருக்கிறது. ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 பணம், ரூ.4,000 மதிப்புள்ள பொருள் கொடுத்திருக்கிறது. மூன்று தவணையாக பணம், அரிசி, புடவை, மூக்குத்தி எனக் கொடுத்து வாக்கை தி.மு.க வாங்கியது. உலகத்துக்கே தெரிந்த இந்தப் பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் தெரியாது. இதற்கு எதற்கு தேர்தல் ஆணையம். நேர்மையான தேர்தல் நடந்திருந்தால், தி.மு.க வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த வெற்றிக்கு பெருமைப்பட தி.மு.க தலைவருக்கு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டம் விழுப்புரம். அதில் இருக்கும் விக்கிரவாண்டி மக்களுக்கு ரூ.500 என்பதே பெரிய தொகை.