திண்டுக்கல்லில் சி.பி.எம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், புதிததாக பொறுப்பேற்றுள்ள மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோரை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஸ்ணன், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்கிற தைரியம் அதிமுக-விற்கு இல்லை. இதே எடப்பாடி பழனிசாமி தான் 2 நாட்களுக்கு முன்பு `நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம்’ என்றவர், இப்போது போட்டியில்லை என்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிமுக அவரின் கட்டுப்பாட்டில் இல்லை.
கடந்த தேர்தலில் அதிமுக-விற்கும், திமுக-விற்கும் 9 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம். அந்த அளவிற்கு அதிமுக தங்கள் ஓட்டை தக்கவைக்கப் போகிறார்களா? இல்லையா எனப் பார்ப்போம். அதிமுக தேர்தலை புறக்கணித்து அதிமுக-வினர் ஓட்டுப்போடாமல் இருந்தால் அதிமுக-வினர் ஓட்டுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் வேறு அணிக்கு அதிமுக-வினர் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக இல்லை என்று அர்த்தம். எது நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மத்தியில் உள்ள சூழ்நிலையை பார்க்கிற போது மோடி அரசு எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பது தெரியாது. ஆட்சி அமைத்த அடுத்த நாளே ஷிண்டே ஆர்ப்பாட்டம் செய்கிறார். சிவசேனாவிலிருந்து பிரிந்து போன கட்சிகள் திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அதனால் இந்த ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம். நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள்.
இந்த கூட்டணி ஆட்சி நடத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்குமா? என்று தெரியாது. குஜராத்திலும் சரி, டெல்லியிரும் சரி பாஜக தலைவர்களையே ஒருங்கிணைத்து ஆட்சி நடத்திய அனுபவம் இல்லாதவர் மோடி. கூட்டுத்தலைமையுடன் செயல்படுகிற பண்பாடே இல்லாதவர். எதேச்சதிகார ஆட்சி நடத்தியே பழக்கப்பட்டவர் எத்தனை நாளைக்கு கூட்டணி சமையல் நடத்தப் போகிறார் என்று தெரியவில்லை” என்றார்.