ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 3 நாள்கள் தங்கியிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவரை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசுகையில், “பாரத நாடு மிகவும் பழமையானது, சீனாவைவிடவும் மிகவும் பழமையான நாடு நம் பாரத நாடு. ரோம், கிரேக்கம் போன்ற சாம்ராஜ்யங்கள் எல்லாம் உலகில் இருகந்தன. அவையெல்லாம் இன்று வெறும் மண்ணாக இருக்கின்றன. அங்கு, நாகரிகம் ஒன்றும் காணப்படவில்லை. நம் நாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இப்படிப்பட்ட பாரத நாட்டில் பிறந்திருக்கிறோம் என்பதில் பெருமைப்பட வேண்டும். உலகில் பல நாடுகள் காணாமல் போனாலும், நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம். வருங்காலத்திலும் நாம் தலை நிமிர்ந்து நிற்போம். பல லட்சம் தலைமுறைகள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆணித்தரமாக செயல்படுத்தி, உணர்ந்து உருவாக்கி கொடுத்தது பாரத பண்பாடு. இந்த பண்பாட்டை உருவாகக்குவதற்கு பல கோடி பலிதானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எத்தனையோ வெளிநாட்டு தாக்குதல் நடந்திருக்கின்றன. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி கொண்டவர்கள் நாம். அந்த பெருமை பாரத நாட்டுக்கு மட்டுமே உண்டு.
பிரயாக்ராஜில் முன்பு ஒரு ஆலமரம் இருந்தது. அனைத்து மக்களும் வந்து பூஜை செய்வார்கள். மரத்தை, கொடியை, செடியை, விலங்குகளை, நதியை பூஜை செய்வது நம்முடைய வழக்கம். ஏனென்றால் அவற்றை நாம் இறைவனாக பார்க்கிறோம். அப்படி பார்த்து தான் ஆலமரத்தை பூஜை செய்தார்கள். டில்லி பாதுஷாவுக்கு அது பிடிக்கவில்லை. உடனே அவர் அந்த மரத்தை வெட்டி மண்ணுடன் வேரை அகற்றினார். அங்கு அந்த மரம் மீண்டும் முளைக்க கூடாது என்பதற்காக இரும்பைக் காச்சி ஊற்றி விட்டு சென்றார். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு அங்கு அந்த மரம் துளிர்த்தது. இப்போது பிரமாண்டமாக அந்த மரம் வளர்ந்து நிற்கிறது. பாரத நாட்டின் பண்பாட்டை யாராலும் அழிக்க முடியாது என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். பாரத நாட்டின் பண்பாட்டை காப்பாற்றுவதற்காக இங்கு பல தியாகிகள் இருந்திருக்கிறார்கள். உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கும் பண்பாடு நம்முடையது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் சிறப்பு கிடையாது. ஒரே பாரத பண்பாட்டில் இருந்து வந்ததுதான் இந்த வேற்றுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் இருந்து வருகின்றன. பாரத பண்பாடு என்று வரும்போது அதை காக்க நாம் உழைக்கிறோம், ஒன்றுபடுகிறோம், ரத்தம் சிந்துகிறோம். ஒற்றுமை உணர்வை பாரதத்திடம் இருந்து உலகம் எதிர்பார்க்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலை உலகத்திற்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதை கொடுக்க நம்மால் தான் முடியும்.