வேலூர்: `அலுவலக கோப்புகள் புரோக்கர்கள் பிடியிலா?' – வெடித்த சர்ச்சையும், கோட்டாட்சியர் விளக்கமும்!

வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் கவிதா மீது புகார்கள் வரிசைக் கட்டிய நிலையில், அவரது அலுவலகத்தில் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர்.

இதன் பின்னணி குறித்துப் பேசுகிற வருவாய்த்துறை உயரதிகாரிகள் சிலர், “வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள `B’ பிளாக்கில் செயல்பட்டு வரும் வருவாய்க் கோட்ட அலுவலரின் அலுவலகம், ஏற்கெனவே `ஊழல்’ தடுப்புத் துறையின் ரேடாரிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காலங்கடந்து `பிறப்பு’, `இறப்பு’ சான்றிதழ்கள் பதிவு செய்வதில் தொடங்கி, பட்டா பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, பெட்ரோல் நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது, பட்டாசு விற்பனைக்கு அனுமதி தருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இங்கு கையாளப்படுவது குறித்து, தொடர் புகார்கள் வரிசைக் கட்டின.

வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் கவிதா

ஏனைய அரசு அலுவலக லஞ்சப் புகார்கள் போலன்றி, இந்த விவகாரத்தில் பல உள்விவகாரங்களும் வெளிவந்திருப்பதுதான் சர்ச்சையே.

அதாவது, தாசில்தார்களிடம் இருந்து பெறப்படும் கோப்புகள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ரகசியமாக வெளியிலுள்ள புரோக்கர்களிடம் கைமாறுகின்றன. பின்னர் கோப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு, புரோக்கர்களே மனுதாரர்களிடம் `டீல்’ பேசுகின்றனர். இந்த டீலிங் விவகாரம் கோட்டாட்சியருக்குத் தெரியுமா, தெரியாதா அல்லது யாருடைய மேற்பார்வையில் நடக்கிறது என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம்.

சில மாதங்களாகவே லஞ்ச ஒழிப்புத்துறையினரும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நான்கைந்து புரோக்கர்களின் பெயர்களையும் `நோட்’ செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி

இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, கிடப்பில் போடப்பட்ட ஒரு விவகாரத்தின் நிலை குறித்து கோட்டாட்சியர் கவிதாவிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு கோட்டாட்சியர் சரிவர பதில் சொல்லாத காரணத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம், அந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டு கூட்டத்திலேயே கோபப்பட்டார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 13-ம் தேதி வருவாய் அலுவலர் மாலதி தலைமையிலான குழுவினர், கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் சென்று மிஸ்ஸிங் ஃபைல்களை தூசுதட்டி தேடியிருக்கின்றனர். இது குறித்த கணக்கெடுப்புகளும் ரிப்போர்ட்டாக மேலிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை விரைவாகப் பாயலாம்’’ என்றனர்.

கோட்டாட்சியர் கவிதாவிடமே குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம். “எந்த ஃபைல்களும் காணாமல் போகவில்லை. ஃபைல்கள் எங்கே போகும்? காணாமல் போனால் உடனடியாக கம்ப்ளைன்ட் கொடுத்துவிடுவேன். ஒருசில ஃபைல்களை மட்டும் ரிப்போர்ட் கேட்டு தாசில்தார்களுக்கு அனுப்பியிருக்கிறோம். அதையும் `நோட்’ போட்டு வைத்திருக்கிறோம். புரோக்கர் எனச் சொல்லப்படும் அஹ்மத் கான் என்பவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அதேபோல, என்மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை கிடையாது’’ என்றார் திட்டவட்டமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *