வேலூர் மாநகராட்சியில், “கடந்த 2 ஆண்டுகளாக உருப்படியாக ஒருவேளையும் நடைபெறவில்லை. மேயர் சுஜாதாவின் செயல்பாடுகள் துளியளவும் சரியில்லை’’ என்று ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கொதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவாக சீரமைக்காமல், அப்படியே பெரும் பள்ளங்களாக விட்டிருப்பதால் விபரீதங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், மாங்காய் மண்டி அருகேயும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மிக மந்தமாக நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக, அங்குத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இன்று காலை பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் பைக்குடன் குப்புற விழுந்திருக்கிறார். பொதுமக்கள் அவரை மீட்டனர். பைக்கையும் கயிறு கட்டி மேலே தூக்கினார்கள். லேசான காயத்துடன் இளைஞர் தப்பினார். பைக்கும் சேதமடைந்திருக்கிறது. `இதே நிலையில்தான் வேலூர் நகரின் பல பகுதிகள் இருக்கின்றன. பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்று கடுகடுக்கிறார்கள் பொது மக்கள். இந்த நிலையில், `பல்வேறு இடங்களில் கடினமான பாறைகள் இருப்பது போன்ற காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக’ பதிலளித்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகத்தின் `அலட்சியமே” இத்தகைய விபத்துகள் ஏற்பட காரணம் எனக் குமுறுகிறார்கள் வேலூர் மக்கள்!