பின்னர், 1990-ல் எர்ஷாத்தின் ராணுவ ஆட்சி முடிவுக்கு வர, 1991-ம் ஆண்டு வங்க தேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார் கலிதா ஜியா. பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோவுக்குப் பிறகு ஓர் இஸ்லாமிய நாட்டில் இரண்டாவதாக ஒரு பெண் பிரதமரானது வங்கதேசத்தில் கலிதா ஜியாதான். அதன்பின்னர் வங்க தேச அரசியல் என்பது `ஷேக் ஹசினா Vs கலிதா ஜியா” என மாறியது. அதையடுத்து 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷேக் ஹசினா வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். அதன்பின்னர், 2001 முதல் 2006 வரை மீண்டும் கலிதா ஜியா வெற்றி பெற்று பிரதமராகப் பணியாற்றினார். அதன்பின்னர் அரசியல் வன்முறை, உள்நாட்டு கலவரம் உள்ளிட்டக் காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட, மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நிலையில், கலியா ஜியா மீதும் அவரின் இரண்டு மகன்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்தநிலையில், 2009-ம் ஆண்டு தேர்தலில் ஹசினா மீண்டும் வெற்றி பெற்றி ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களிலும் ஹசினாவே பிரதமராக வெற்றிபெற, 2018-ம் ஆண்டில் தனது அரசியல் எதிரியும், பி.என்.பி எதிர்கட்சித் தலைவருமான கலிதா ஜியாவை ஊழல் வழக்கில் சிறையிலடைத்தார். சுமார் 17 ஆண்டுகள் கலியா ஜியாவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. கலிதா ஜியாவின் உடல்நிலை காரணமாக அவர் வீட்டு சிறையில் இருந்துவந்தார். இந்த நிலையில்தான், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வங்கதேசத் தேர்தலில் மீண்டும் ஹசினாவே வெற்றிபெற்றார். இது சர்ச்சைக்குரிய வெற்றி என்றும், இந்த வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் அரசியல் தலையீடு இருப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. காரணம் தொடக்கம் முதலே ஷேக் ஹசினா இந்தியா ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துவந்தார். இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பி.என்.பி கட்சியினர் ஹசினா இந்தியாவின் அடிமை என்ற அளவுக்கு விமர்சித்தனர்.
அதேசமயம் கலிதா ஜியாவின் பி.என்.பி கட்சிக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளித்து வந்தது. இந்த நிலையில்தான், இட ஒதுக்கீட்டு விவகாரம் ஹசினாவுக்கு எதிரானப் போராட்டமாக வெடிக்க, அதைப் பயன்படுத்திக்கொண்ட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு பி.என்.பி கட்சியுடன் சேர்ந்து மாணவர் போராட்டத்தை தூண்டிவிட்டது என்கிறார்கள். இதன்விளைவால்தான் ஹசினா பதவியைத் துறந்து, இந்தியாவுக்குப் பறந்தார். வங்கதேசத் தந்தையின் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆறாண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வங்கதேசத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. ஹசினா பதவியை ராஜினாமா செய்த பிறகும் போராட்டம் நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை 550-ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர் தலைவர்கள், எதிர்கட்சியினர், கலிதா ஜியா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அந்தவகையில், போராட்டகாரர்கள் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட ராணுவம், வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸை அறிவித்திருக்கிறது. அதன்படி முகமது யூனுஸும் `போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அமைதி வழிக்குத் திரும்பவேண்டும், நமது வெற்றியை சிறந்த வழியில் பயன்படுத்துவோம்’ என அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில் தான் நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது. `எங்கள் மாணவர்கள் எந்தப் பாதையைக் காட்டுகின்றார்களோ, அதனை முன்னெடுத்துச் செல்வோம்’ என அவர் தெரிவித்துள்ளார். இனி கலவரம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88