வரும் ஆண்டில் விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும், டிஜிட்டல் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 400 மாவட்டங்களில் டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் காய்கறிகளின் சீரான விநியோகத்தை மேற்கொள்ள குறிப்பிட்ட இடங்களில் காய்கறி உற்பத்தி மண்டலங்கள் உருவாக்கப்படும். விவசாய ஆராய்ச்சியில் மறுஆய்வு மேற்கொள்ளப்படும். விவசாயத்தில் காலநிலையை எதிர்த்து வளரக்கூடிய ரகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். புதிதாக 109 அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை எதிர்த்து வளரக்கூடிய ரகங்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்படும்.
பயோ உரங்களை விநியோகிக்க 10 ஆயிரம் இடங்களில் பயோ இடுபொருள் மையங்கள் உருவாக்கப்படும். காலநிலை, பயிர் ரகங்கள் பற்றிய ஆலோசனை, விளைபொருள்களின் விலை குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும். ஜன் சமர்த் வகையான கிஷான் கிரெடிட் கார்டுகள் ஐந்து மாநிலங்களில் வழங்கப்படும். நபார்டு வங்கி மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி செய்யப்படும்.
அறிவிப்புகள்:
கடுகு, எள், சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
காய்கறி விற்பனை தொடர் சங்கிலி உருவாக்கப்படும்.
வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும்.
ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு.
டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை பின்பற்றப்படும்.
டிஜிட்டல் முறையில் கரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சர்வே செய்யப்படும்.
1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற்றப்படுவார்கள்.
10,000 பயோ உரங்கள் மையங்கள் கிராம பகுதிகளில் அமைக்கப்படும்.