விருதுநகரில் தமிழக அரசு நலத்திட்டத்தில் பயனாளியாக சேர்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய அரசு பணியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைதுசெய்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயமுருகன்-பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசின் சமூக நலத்துறை வாயிலாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25 ஆயிரம் நிரந்தர வைப்புநிதி செலுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி பாண்டீஸ்வரி, தனது இரு பெண் பிள்ளைகளையும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக, இணைக்க கடந்த 2023-ம் ஆண்டில் மனு அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது விண்ணப்பத்தின் மீதான நிலை குறித்து அறிய விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பாண்டீஸ்வரி சென்றுள்ளார். அங்கு சமூகநலத்துறை விரிவாக்க அலுவலகத்தில் விருதுநகர் ஊர்நல அலுவலராக பணியாற்றி வரும் முருகேஸ்வரி என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, தமிழக அரசின் நலத்திட்டத்தில் உங்கள் விண்ணப்பத்தினை பயனாளிகளாக இணைப்பதற்கு 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என முருகேஸ்வரி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டீஸ்வரி, தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என கூறவும், ஆயிரம் ரூபாயாவது லஞ்சம் தந்தால் மட்டுமே மனுவினை பரிசீலிக்க முடியும் என முருகேஸ்வரி கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் தர விருப்பம் இல்லாத பாண்டீஸ்வரி, அரசு பணியாளர் முருகேஸ்வரி லஞ்சம் கேட்டது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும்படி பாண்டீஸ்வரிக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.
அதன்பேரில் இன்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பாண்டீஸ்வரி, ஊர்நல அலுவலர் முருகேஸ்வரியை சந்தித்து ஆயிரம் ரூபாயை கொடுக்க முற்பட்டபோது, அந்த பணத்தை அங்கு பணியாற்றி வரும் மற்றொரு ஊழியரான லதாவேணியிடம் கொடுக்குமாறு முருகேஸ்வரி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து லதாவேணி லஞ்ச பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன், சால்வன் துரை தலைமையிலான போலீஸார் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி மற்றும் லதாவேணியை கையும் களவுமாக கைது செய்தனர்.” என்றனர்.
இது குறித்து மேலும் பேசிய அதிகாரிகள், “விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 8 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜூலை மாதத்தில் மட்டும் 5 லஞ்ச வழக்குகளில் 6 அரசு ஊழியர்கள் உட்பட 7 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறினர்.