அன்று முதல் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றிய ஆர்.மகாதேவன், இந்த ஆண்டு மே 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதில், 2013 முதல் 11 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக 96,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்த்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தலைமை தாங்கியபோது, 6,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இவர், 2021-ல் ஒரு வழக்கில் யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பழங்கால நினைவுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.
அதோடு, சிலை திருட்டு வழக்குகளில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவுடன் சிறப்பு டிவிஷன் பெஞ்ச் தலைமை தாங்கி, வெளிநாடுகளுக்கு திருடுபோன சிலைகளை மீட்க அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், திருக்குறளை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்த்து நன்னெறி போதிக்க வலியுறுத்தியது என இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இவை தவிர, சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உட்பட பல்வேறு கமிட்டிகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த நிலையில், இவரின் சட்டப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதிவு உயர்வு பெற்றிருக்கிறார். இவர் 2028, ஜூன் 9-ம் தேதிவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதிவியில் இருப்பார். ஆர்.மகாதேவன் சட்டப்பணி மட்டுமல்லாது தமிழ் இலக்கியங்களிலும் ஆர்வமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.