மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு பெண் வாக்காளர்களை கவர `லாட்லி பெஹ்னா யோஜனா’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இதன்படி மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 21 வயது முதல் 65 வயது வரையுள்ள பெண்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்து இருந்தார். இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மேலும் சில சலுகைகளை அறிவித்துள்ளார். ஆஷாதி ஏகாதசியையொட்டி இளைஞர்களை கவர புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.
லாட்லா பாய் யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் படி 12-வது படித்த இளைஞர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். டிப்ளமோ படித்திருந்தால் மாதம் 8 ஆயிரமும், பட்டப்படிப்பு படித்திருந்தால் 10 ஆயிரம் ரூபாயும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். பண்டர்பூரில் இத்திட்டங்களை ஷிண்டே அறிவித்தார்.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இது போன்ற ஒரு திட்டத்தை இதற்கு முன்பு எந்த ஒரு அரசும் அறிவித்ததில்லை என்றும், இளைஞர்கள் தொழிற்சாலையில் பயிற்சி வேலையில் சேர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும், இதற்கான உதவித்தொகையை மாநில அரசு வழங்கும் என்றும் அறிவித்தார். சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அறிவிக்கப்பட்ட போது, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்படவேண்டும் என்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்திருந்தார். இவ்விவகாரத்தில் ஆண் பெண் பாகுபாடு இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். 12 வகுப்பு படித்தவர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருப்பார்கள் என்பதால் அவர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாகி விடுகின்றனர். எனவே அதனை கருத்தில் கொண்டு 12வது வகுப்பு படித்தவர்களுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88