கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் பங்கேற்ற 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பள்ளி மாணவிகளுக்கான என்சிசி பயிற்சி நடைபெற்றது. இதற்காக, 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியான சிவராமன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் மாணவிகளை மிரட்டி சிவராமன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 12 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையும் படிக்க:
நாம் தமிழர் நிர்வாகி மீது போக்சோ வழக்கு… கட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை
அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பள்ளியில் தங்கியிருந்த 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும் பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்த போதும், அதனை பெரித்துப்படுத்த வேண்டாம் என அவர் அலட்சியப்படுத்தியதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் வெஸ்லி, ஆசிரியர்கள் ஜெனிபர், சக்திவேல் மற்றும் சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் சுதாகரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : செல்வம் (கிருஷ்ணகிரி)
.