`15 நாள்களுக்குள் ஆளுநர் பதவி கொடுக்காவிட்டால்…’ – பாஜக-வுக்கு சிவசேனா முன்னாள் எம்.பி எச்சரிக்கை!

சமீபத்தில் மத்திய அரசு 9 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமனம் செய்தது. ஆளுநர் நியமனத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பா.ஜ.க வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் சிவசேனா(ஷிண்டே)விற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் சிவசேனா கடும் அதிருப்தியில் இருக்கிறது. சிவசேனாவை சேர்ந்த அமராவதி தொகுதி முன்னாள் எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் தனக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் பதவி கிடைக்கவில்லை. இதனால் அட்சுல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து ஆனந்த்ராவ் அளித்த பேட்டியில், “‘எனக்கு ஆளுநர் பதவி கொடுப்பதாக முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி கொடுத்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சிவசேனாவிற்கு இரண்டு அமைச்சர் பதவி மற்றும் இரு ஆளுநர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க வாக்குறுதி கொடுத்தது. ஆனால் பா.ஜ.க தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

ஆளுநர் பதவிக்கு எனது பெயரை பரிந்துரைத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர், மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பினர். ஆனால் மத்திய அரசு அறிவித்த ஆளுநர்கள் பட்டியலில் எனது பெயர் இல்லை. அதோடு அமைச்சரவையிலும் ஒரு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுத்தனர். வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது பா.ஜ.க-வின் கடமை. இனியும் என்னால் காத்திருக்க முடியாது. என்னை பா.ஜ.க 15 நாள்களுக்குள் ஆளுநராக நியமிக்கவேண்டும். அப்படி நியமிக்கவில்லையெனில் அமராவதி முன்னாள் எம்.பி நவ்நீத் ரானாவின் சாதிச்சான்று செல்லும் என்று கூறி கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வேன்” என்று மிரட்டினார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவசேனா சார்பாக போட்டியிட்ட ஆனந்த்ராவ் அட்சுல், தேசியவாத காங்கிரஸ் துணையோடு சுயேச்சையாக போட்டியிட்ட நவ்நீத் ரானாவிடம் தோற்றுப்போனார். வெற்றி பெற்ற பிறகு நவ்நீத் ரானா பா.ஜ.க பக்கம் தாவிவிட்டார். நவ்நீத் ரானா போலி சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்து தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஆனந்த்ராவ் அட்சுல் மனுத்தாக்கல் செய்திருந்தார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு நவ்நீத் ரானாவின் சாதிச்சான்றிதழ் செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. மக்களவை தேர்தலில் அமராவதி தொகுதியில் போட்டியிட சிவசேனா சார்பாக ஆனந்த்ராவ் சீட் கேட்டார். உடனே அவரை அமைதிப்படுத்த பா.ஜ.க ஆளுநர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் நவ்நீத் ரானாவும் தோற்றுப்போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *