பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டம் வன்முறையாகவும் மாறியிருக்கிறது. இதனால், இந்தியர்கள் கவனத்துடன் இருக்குமாறு லண்டனில் இருக்கும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற யோகா, நடனப் பயிலரங்கில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கடந்த ஜூலை 29-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். அந்த கொலைவெறித் தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக, வேல்ஸை சேர்ந்த 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்பவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், தாக்குதல் நடத்தியவர் 2023-ம் ஆண்டு படகு மூலமாக பிரிட்டனுக்கு வந்த அகதி என்றும், அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரிகளான ‘இங்கிலீஷ் டிஃபன்ஸ் லீக்’ என்ற அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக தொடங்கப்பட்ட அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும், வடக்கு அயர்லாந்திலும் இஸ்லாமியர்களையும், மசூதிகளையும் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. இதனால், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் சௌத்போர்ட் மசூதிக்கு வெளியில் நடைபெற்ற மோதலைத் தடுக்கச் சென்ற போலீஸார் மீது கற்களையும், பாட்டில்களையும் கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதில், 50-க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘இது போராட்டம் அல்ல. குண்டர்களால் திட்டமிடப்பட்ட கலவரம். இதற்கு பிரிட்டனில் இடம் கிடையாது’ என்று எச்சரித்திருக்கிறார் பிரதமர் கியெர் ஸ்டார்மர். மேலும் அவர், ‘வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.
இஸ்லாமியர்களையும், மசூதிகளையும் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களை வலதுசாரி குண்டர்கள் என்று அழைப்பதற்கு நான் வெட்கப்பட மாட்டேன். தோல் நிறத்தை வைத்து ஒருவர் குறிவைக்கப்படுவது எவ்வளவு அச்சுறுத்தலானது என்பது எனக்குத் தெரியும். இந்த வன்முறை கும்பல் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தச் சூழலை அரசு சமாளிக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
அங்கு வன்முறை நிறைந்த சூழல் நிலவுவதால், அங்கு இருக்கும் தங்கள் நாட்டினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. தற்போது பாதுகாப்பாற்ற சூழலில் பிரிட்டனில் நிலவுவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டினரைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
‘பிரிட்டனின் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டிருப்பதை இந்திய பயணிகள் நன்கு அறிவீர்கள். பிரிட்டனின் நிலவரத்தை தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகள், சூழ்நிலையை அறிவித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் செய்திகள், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும். போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்று லண்டனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பிரிட்டனில் 2011-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பின்பற்றப்பட்ட உத்திகளை இப்போது பின்பற்றப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். 2011-ம் ஆண்டு, பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தபோது பொது வழக்குகள் பிரிவின் இயக்குநராக தற்போதைய பிரதமர் கியெர் ஸ்டார்மர் இருந்தார்.
‘சட்ட அமலாக்கத்துக்கு உறுதியான தீர்வுகள் எங்களிடம் இருக்கின்றன. அதனால் நாங்கள் கைது நடவடிக்கைகளையும், குற்றவாளிகளுக்கான தண்டனைகளை மிக விரைவாக பெற்றுத்தருவதையும் உறுதி செய்ய முடியும்’ என்று அவர் கூறியிருக்கிறார்..
மேலும், ‘2011-ம் ஆண்டு, பொது வழக்குகளின் இயக்குநராக இருந்தபோது, அந்தச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக நான் இருந்திருக்கிறேன். வன்முறையில் ஈடுபடும் குண்டர்களை விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றும் ஸ்டார்மர் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88