மரங்களையும் இந்த உலகையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் மரங்கள் இல்லாமல், இப்புவியில் உயிரினங்கள் இல்லை. மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் உணவாகப் பயன்படுகின்றன. வெப்பம் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதும் மரங்கள்தான். எண்ணற்ற பறவைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவை மரங்கள்தான். மரங்கள் காய்ந்த பிறகும் நமக்கு பயன்படுகின்றன.
இந்நிலையில் ஏறத்தாழ 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது. தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே இந்தளவுக்கு மரங்கள் காணாமல் போயிருக்கின்றன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். டெல்லியிலுள்ள பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் பிரகாஷ் ஶ்ரீவத்சவா, அருண்குமார் தியாகி, முனைவர் செந்தில்வேல் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.