Ajit Doval: மீண்டும் அஜித் தோவல், பி.கே.மிஸ்ரா… பிரதமர் மோடிக்கு பக்கபலமாக நீடிப்பதன் பின்னணி!

2014, 2019 என இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க., இந்த முறை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது.

அஜித் தோவல்

மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்தவுடன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரின் நியமனத்துக்கும் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. அஜித் தோவல், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், 1968-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டவர். 2014-ம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன், அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். உளவு செயல்பாடுகளில் திறமை மிகுந்தவரான அஜித் தோவலை, 2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பா.ஜ.க அரசு நியமித்தது.

மோடி

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. அதேபோல, காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டிருக்கிறார். ‘வெளியுறவுப் பாதுகாப்பு நிபுணரான தோவல், கடந்த காலத்தில் ஆற்றிய பணிகளால் பிரதமர் மோடியின் நன்மதிப்பைப் பெற்றவர். குறிப்பாக, 2014-ம் ஆண்டு, ஈராக் மருத்துவமனையில் சிக்கிய இந்தியாவைச் சேர்ந்த 46 செவிலியர்களை மீட்டதில் இவர் முக்கியப் பங்காற்றினார். அதற்காக, ஈராக்குக்கு அவர் ரகசியப் பயணம் மேற்கொண்டார்.

2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதலிலும் அஜித் தோவலுக்கு முக்கியப் பங்கு இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலுள்ள பாலகோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய ராணுவம் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியதன் பின்னணியிலும் தோவல் இருந்திருக்கிறார். ‘ஐ.பி’, ‘ரா’ ஆகிய உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை இவர் கவனித்துக்கொள்கிறார்.

பி.கே.மிஸ்ரா, முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

அதேபோல, பிரதமரின் முதன்மைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் பி.கே.மிஸ்ரா, 1972-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டவர். இவர், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, அங்கு முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய இவர், பின்னர், மத்திய அரசில் வேளாண் துறை செயலாளராகவும் இருந்தார்.

பணி ஓய்வுக்குப் பிறகு, 2019 -ம் ஆண்டு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடியின் பெரும் நம்பிக்கையைப் பெற்றவர் என்பதால், அவரே மீண்டும் பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தங்கள் துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் பெரும்பாலும் ஊடகங்களிடம் நெருங்குவதில்லை.

மோடி, அஜித் தோவல்

பாதுகாப்பு விவகாரங்களில் அஜித் தோவல் பெரும் பங்காற்றியிருக்கும் அதே நேரத்தில், அவரைச் சுற்றி பல சர்ச்சைகளும் உண்டு. ரஃபேல் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டு, மோடி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. அந்த விவகாரத்தில் அஜித் தோவலின் பெயர் அடிபட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சில நாள்களுக்குப் பிறகு, அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் கேமன் தீவுகளில் பணம் பதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு, அந்தப் பணம் இந்தியாவுக்குத் திரும்பிவந்ததாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின.

ஜெய்ராம் ரமேஷ்

இந்த விவகாரத்தை அப்போது கிளப்பிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ், ‘கேமன் தீவுகளிலிருந்து 2017-18 ஆண்டில் ரூ.8,300 கோடி இந்தியாவுக்கு வந்தது குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *