முன்னதாக, நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ கந்தா ஸ்ரீனிவாஸ் ராவ் தலைமையிலான குழுவும், ஊடக குழுவும் முதல்முறையாக அந்த இடத்துக்கு சென்றது. அதைத்தொடர்ந்து அங்கு கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டடத்தின் வெளிப்புற, உட்பட படங்கள் மற்றும் வீடியோக்களை தெலுங்கு தேசம் கட்சி தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ஜெகன்மோகனையும், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசையும் விமர்சிக்கத் தொடங்கின.
இதுகுறித்து பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ கந்தா ஸ்ரீனிவாஸ் ராவ், “இந்த ருஷிகொண்டா அரண்மனை 9.88 ஏக்கர் பரப்பளவில் கடல் நோக்கி அமைந்திருக்கிறது. முந்தைய அரசு, ஆடம்பர வசதிகள், உயர்தர ஃபர்னிஷிங், பளபளக்கும் சரவிளக்குகள், குளியல் தொட்டிகள் மற்றும் பணிகள் ஆகியவற்றில் பொது நிதியைப் பயன்படுத்தி இதைக் கட்டியிருக்கிறது.


இந்த அரண்மனைக்காக, ருஷிகொண்டாவில் ஆண்டுக்கு ரூ.8 கோடி வரை வருமானம் ஈட்டித்தந்த சுற்றுலாவுக்கான பசுமையான ரிசார்ட்டுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய மாநில அரசு முதலில் இதை நட்சத்திர ஹோட்டல் என்று கூறியது. பின்னர் முதல்வர் முகாம் அலுவலகம் என்றது. பிறகு சுற்றுலாத் திட்டம் என்று கூறியது. உயர் நீதிமன்ற நிபுணர் குழு இந்த கட்டுமானத்தில் பல மீறல்களைக் கண்டறிந்த பிறகும், கட்டுமானப்பணி தொடரப்பட்டிருக்கிறது. நல்லவேளையாக இந்த அரண்மனையை ஜெகன்மோகன் ரெட்டி பயன்படுத்துவதை கடவுளே தடுத்துவிட்டார்” என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டி விமர்சித்தார்.