இந்தியாவின் ஐ.டி துறைக்கான தலைநகரமாகக் கருதப்படுவது கர்நாடக மாநிலத்தின் பெங்களூர். கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டம் 1961-ல் திருத்தம் செய்து, ஐ.டி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த வேண்டும் எனக் கர்நாடக மாநில ஐ.டி நிறுவனங்களின் சார்பில் அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தொழிலாளர் சங்கம் (கேஐடியு) எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கேஐடியு, “தற்போது கர்நாடகாவில் நடைமுறையில் இருக்கும் சட்டம், கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது. ஆனால், ஐ.டி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு அமல்படுத்தப்பட்டால், நீட்டிக்கப்பட்ட வேலை நேரம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக அறியப்படும் பெங்களூரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், ஐ.டி/ஐ.டி.இ.எஸ் நிறுவனங்களின் தினசரி வேலை நேரத்தைக் காலவரையின்றி நீட்டிக்க வாய்ப்பை ஏற்படுத்தும். தற்போதுள்ள செயல்முறையில் மூன்று ஷிப்ட் முறைக்குப் பதிலாக இரண்டு ஷிப்ட் முறைக்கு நிறுவனங்கள் செல்ல அனுமதிக்கும். இதை ஏற்காதவர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த சட்டத் திருத்த மசோதா முன்மொழிவு கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாள ர் வர்க்கத்தின் மீது இதுவரை நிகழ்த்தப்படாத மிகப்பெரிய தாக்குதல்.
KCCI-ன் அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகளையும், 55% பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். வேலை நேரம் அதிகரிப்பது இந்தச் சூழலை மேலும் மோசமாக்கும். WHO-ILO ஆய்வறிக்கையில் வேலை நேரம் அதிகரிப்பது, பக்கவாதத்தால் இறப்பதற்கான 35% அதிக ஆபத்து, இஸ்கிமிக் இதய நோயால் இறக்கும் அபாயம் 17% அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிகரித்த வேலை நேரம் உற்பத்தித்திறனை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்ற உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் காலகட்டத்தில், இந்த சட்டத் திருத்த முன்மொழிவு வந்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இந்தியாவின் பணி கலாசாரம் மாற வேண்டும் என்றும், இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் l பரிந்துரைத்தது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.