வங்கதேசத்தில் மாணவர்களின் கடும் போராட்டம், கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அண்டை நாடான இந்தியா, அவருக்கு அடைக்கலம் கொடுத்த அதேவேளையில், வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இருப்பினும், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாகக் காணொளிகள் வெளியாகிவருகின்றன. இந்த நிலையில், 1971 வங்கதேச விடுதலைக்கான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்ததை நினைவூட்டும் அடையாள சிலைகள், கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக, ஆங்கிலேயர்களிடமிருந்து பாகிஸ்தான் விடுதலை பெற்றதையடுத்து, கிழக்கு பாகிஸ்தானில் அதிகளவிலிருந்த வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள், மேற்கு பாகிஸ்தானிலிருக்கும் இஸ்லாமியர்களால் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், ஒடுக்கப்படுவதாகவும் அவர்களுக்கெதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதனால், 1971-ல் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக தங்களின் விடுதலைப் போரை அவர்கள் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அரசு கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் களமிறங்கியது. மேலும், இந்திய ராணுவம் மேற்கு பாகிஸ்தானை எதிர்த்துப் போரிட்டது. இறுதியில், மேற்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, 93,000 படைவீரர்களுடன் இந்தியாவின் கிழக்குக் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் சரணடைந்தார். இதன் விளைவாக, இந்தியாவின் ஆதரவுடன் வங்கதேசம் என்ற தனிநாடு உதித்தது.
இதனை நினைவுபடுத்தும் வகையில், முஜிப்நகரில் ஷஹீத் நினைவு வளாகம் அமைக்கப்பட்டு, அதில் மேற்கு பாகிஸ்தானின் சரணடைதலை அடையாளப்படும் வகையில், இந்திய ராணுவம் மற்றும் வங்கதேசத்தின் முக்தி பாஹினியிடம், மேற்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் கையெழுத்திடுவது உட்பட பல சிலைகள் நிறுவப்பட்டன. அவற்றில் சில சிலைகள் தற்போது உடைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த செயலைக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், உடைந்த சிலைகளின் படத்தை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “முஜிப்நகரிலுள்ள ஷஹீத் நினைவு வளாகத்தில், இந்தியாவை எதிர்ப்பவர்களால் அழிக்கப்பட்ட சிலைகளின் படங்களைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இஸ்லாமிய பொதுமக்கள் பாதுகாப்பதாகச் செய்திகள் வந்தாலும், பல இடங்களில் இந்திய கலாசார மையம், கோயில்கள், இந்துக்களின் இல்லங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
சில கலவரக்காரர்களின் அஜெண்டா இதில் தெளிவாகத் தெரிகிறது. எனவே, முகமது யூனுசும் அவரது இடைக்கால அரசும், அனைத்து வங்கதேச மக்களின் நலன்களுக்காக சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகைய கொந்தளிப்பான நேரத்தில் வங்கதேச மக்களுடன் இந்தியா நிற்கிறது. ஆனால், இந்த அராஜகத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.