வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. நாடளவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
கடந்த ஒருவாரமாகப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் வங்கதேச தலைநகர் டாக்காவில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தை முற்றுகையிட திரண்டனர். நிலைமை மோசமடைந்ததால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
இதற்கிடையில், வங்கதேச பிரதமர் இல்லத்தைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய காட்சிகள், இலங்கை அதிபர் மாளிகை சூரையாடப்பட்டதை நினைவுபடுத்தியது. அதைத் தொடர்ந்து, காவல் நிலையங்கள், பிற அரசு கட்டடங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.