வங்கதேசத்தில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த கலவரத்தால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, முஹம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்த போதும், வங்கதேசத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. குறிப்பாக அங்கே இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக தகவல் வருகிறது. இந்தச் சூழலில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ், தன்னுடன் தொலைபேசி வழியாக உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “வங்கதேச இடைக்கால ஆட்சியாளர் முஹம்மது யூனுஸிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது வங்க தேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். நிலையான ஜனநாயகம், அமைதியான மற்றும் முற்போக்கான வங்காளதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.