வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பம், பெண்கள், பின்தங்கிய மாவட்டத்தினர், பூர்வ குடிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 56 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் இருந்தது. வங்கதேச பிரதமராக இருக்கும் ஷேக் ஹசினா 2018-ம் ஆண்டு ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு முறையையும் ரத்து செய்தார். இதை எதித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை தற்காலிகமாக ரத்து செய்து, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தது.
அதற்கிடையில், இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவற்றை ஆளும் அரசு மிகக் கடுமையாக கட்டுப்படுத்த முயன்றது. அதன் விளைவாக அங்கு பெரும் வன்முறைகள் வெடித்தன. கடந்த மாதம் இந்த வன்முறைகளால் வங்கதேசம் பெரும் பதற்ற சூழலை எதிர்கொண்டது. காவல்துறைக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், வாகனங்கள் தீக்கிரையாகின. தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகளும் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அண்மையில் சற்றே தணிந்த அந்த வன்முறை மோதல்கள், தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.
நேற்று மட்டும் இந்த வன்முறை கலவரத்தில் 98 பேர் பலியாகியானதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இட ஒதுக்கீடு தொடர்பான இந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவ, காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது அமைச்சர்கள் பலரை நீக்க வேண்டும் என்றும் மீண்டும் போராட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்துக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்தியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.