இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. டெல்லி விமான நிலையம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழையால பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று பீகார். பீகாரில் பருவமழை பெய்யத் தொடங்கியதிலிருந்து வரிசையாக மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பாலங்கள் இடிந்து விழுந்துவருகிறது. கடந்த 15 நாள்களில் பீகார் மாநிலத்தின் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பாலம் இடிந்து விழுந்த அனைத்து மாவட்டங்களிலும் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், முன்னாள் பத்திரிகையாளரும், பீகார் மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளருமான நிகில் ஆனந்த், தன் எக்ஸ் பக்கத்தில், “பீகாரில் எந்த மேம்பாலம், அல்லது பாலம் வழியாக செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்தப் பாலம் எப்போது சேதமடையும் என்பது தெரியவில்லை. தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது ஆச்சரியமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையும், தணிக்கையும் தேவை. இந்தப் பாலங்களை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீதும், பொறியாளர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். அவர்களை கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள பாலங்கள் அனைத்தும் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் முழு வீச்சில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.