பா.ஜ.க தலைவராக இருக்கும் ஜெ.பி.நட்டா மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். நட்டாவின் பா.ஜ.க தலைவர் பத கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முடிந்துவிட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு நட்டாவின் பதவி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால் பா.ஜ.கவிற்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகளி கட்சித் தலைமை தீவிரப்படுத்தியுளது.
ஆரம்பத்தில் இப்பதவிக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதான் மற்றும் சிவ்ராஜ் சிங் செளகான் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்று ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சியை பிடித்துவிட்டதால் தர்மேந்திர பிரதானுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது.
தர்மேந்திர பிரதான் எந்த வித சர்ச்சையிலும் சிக்காதவர். அதோடு ஆர்.எஸ்.எஸ்.அடிமட்டத்திலிருந்து வந்தவர். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டதால் அவர் இப்பதவிக்கான போட்டியில் இருந்துவிலகிவிட்டார். பின்னர், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் பெயர் இப்பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அவரும் மத்திய அமைச்சராக்கப்பட்டுவிட்டார். இதனால் இப்போது மேலும் 4 பேர் இப்பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பெயர் இப்பதவிக்கு வலுவாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் விருப்பமானவராக விளங்கும் வினோத் தாவ்டே பா.ஜ.க தலைவராவதில் அவரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இது தவிர தெலங்கானாவை சேர்ந்த கே.லட்சுமண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுனில் பன்சல் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஓம் மாத்தூர், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. ஓம் மாத்தூர் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.
மற்றொரு புறம் நாளுக்கு நாள் பெண் வாக்காளர்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. பெண் வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிக்கு முதல் பெண் தலைவரை கொண்டு வருவது குறித்தும் கட்சி தலைமை பரிசீலித்து வருகிறது. எனவேதான் தேர்தலில் தோல்வி அடைந்த ஸ்மிருதி இரானியை கட்சி தலைவர் பதவிக்கு கொண்டு வருவது குறித்தும் பா.ஜ.க தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் பரப்பப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்தார். அதோடு ராகுல் காந்தியை அடிக்கடி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்துவிட்டார். இதனால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அவரை கட்சிப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்வது குறித்து பா.ஜ.க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியை தோற்கடித்தவர் என்ற பெயர் ஸ்மிருதி இரானிக்கு இருக்கிறது. அதோடு அடிக்கடி ராகுல் காந்தியின் பேச்சுக்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். எனவே தான் கட்சி அவரது பெயரை பரிசீலிப்பதாக சொல்கிறது. விரைவில் மக்களவை கூடி பட்ஜெட் தாக்கல் செய்யும். பட்ஜெட் கூட்டம் முடிந்த பா.ஜ.கவுக்கு யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. பா.ஜ.க தலைவரை நியமிக்கும் போது இதையும் கருத்தில் கொண்டு செயல்பட கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவை சேர்ந்த வினோத் தாவ்டே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88