பா.ஜ.க-வுக்கும், அதன் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இடையே சமீபகாலமாக முட்டலும், மோதலும் எழுந்திருக்கிறது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலையொட்டி இந்த மோதல் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பா.ஜ.க-வினர் கண்டுகொள்ளவில்லை என்ற அதிருப்தியும், கோபமும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் தேர்தல் பணி ஆற்றவில்லை என்று செய்திகளும் பரபரத்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ரத்தன் ஷர்தா என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். ‘மோடி 3.0 – தவறுகளை சரிசெய்வதற்கான ஓர் உரையாடல்’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், ‘பா.ஜ.க தலைவர்களும், நிர்வாகிகளும் வீதிகளில் ஒலிக்கும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பதில்லை. மாறாக, பிரதமர் மோடியின் புகழ் வெளிச்சத்தில் அவர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ‘தங்களைப் பற்றிய அதீத நம்பிக்கையில் பா.ஜ.க தலைவர்கள் இருந்தனர். ஆனால், யதார்த்த நிலை என்னவென்பதை தேர்தல் முடிவுகள் காண்பித்துவிட்டன’ என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வேலை செய்யவில்லை என்று வெளியான செய்திகள் உண்மைதான் என்பது இந்தக் கட்டுரை மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, ‘உண்மையான சேவகர்கள் திமிரோடு இருக்க மாட்டார்கள்’ என்று பா.ஜ.க-வினரை மறைமுகமாக அவர் விமர்சித்திருந்தார். ஆர்கனைசர் கட்டுரையிலும், ‘பா.ஜ.க-வின் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் பணி ஆற்றுவது தொடர்பாக ஸ்வயம்சேவகர்களை (ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்) தொடர்புகொள்ளவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இடையிலான ஈகோ மோதலை வெளிப்படுத்தும் வகையில் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். அதாவது, தன் சொந்தப் பிரச்னைகளை தாமாகவே கையாளக்கூடிய நிலையில் பா.ஜ.க இருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ் தேவையில்லை’ என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தையும், தற்போது மோடி பிரதமராக இருக்கும் காலத்தையும் ஒப்பிட்டு அவர் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். வாஜ்பாய் காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உதவி தேவைப்படும் அளவுக்கு சிறிய சக்தியாக பா.ஜ.க இருந்தது. இப்போது பா.ஜ.க வளர்ந்துவிட்டது. யாருடைய தயவுமின்றி பா.ஜ.க சுயமாக இயங்குகிறது என்ற ரீதியில் ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.
ஆனால், ஜே.பி.நட்டா சொன்னதற்கு மாறாக, மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. பா.ஜ.க 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 240 தொகுதிகளில்தான் பா.ஜ.க வென்றது. ஆட்சியமைக்கத் தேவையான 272-ஐ பா.ஜ.க-வால் தொடமுடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிககு மொத்தம் 293 இடங்கள்தான் கிடைத்தன. எனவே, யதாத்தம் புரியாமல் பா.ஜ.க தலைவர்கள் மிதப்பில் இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பு கூறுகிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், “தனது கட்டுப்பாட்டில் பா.ஜ.க இருக்க வேண்டும். தன்னுடைய அரசியல் செயல்திட்டங்களை பா.ஜ.க ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கிறது. ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியதிகாரத்தில் அமரும் அளவுக்கு பா.ஜ.க வளர்ந்திருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்து இருப்பதற்கு பா.ஜ.க தலைவர்கள் விரும்பவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணம்” என்கிறார்கள்.
இன மோதல்களால் மணிப்பூர் மாநிலம் பற்றியெரிந்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட நிலையிலும், மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்றுவரை செல்லவில்லை. இந்த நிலையில், ‘மணிப்பூரில் சட்டஒழுங்கு சீர்குலைந்ததற்கு மோடி அரசின் பாதுகாப்பு தோல்வியடைந்ததே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சித்திருக்கிறார். மேலும், `தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் போதும். மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருக்கிறது’ என சாடி இருந்தார்.
வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மோதல் மேலும் தீவிரமடையுமா, அல்லது தணியுமா? போக போக தான் தெரியும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88