Colony: `காலனி என்பது அடிமைத்தனத்தின் அடையாளம்; இனி..!' – பதவி விலகும் அமைச்சரின் அதிரடி உத்தரவு

ஒரு சமூகத்தினரை, இனத்தவரை, நாட்டினரை ஆதிக்கத்தால் அடிமைப்படுத்துவதே காலனித்துவம் (colonialism). பள்ளிப் பருவத்தில் சமூக அறிவியல், வரலாறு பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைபட்டுக் கிடந்த கிடந்த காலத்தை காலனித்துவ காலம் என்று அனைவருமே படித்திருப்போம். நாட்டின் விடுதலைக்குப் பிறகும், நகர்ப்புறம், கிராமப்புறம் எங்கும் இன்றும் மக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் சொல்லாக காலனி (colony) என்ற வார்த்தையைப் பார்த்திருப்போம்.

கே.ராதாகிருஷ்ணன்

குறிப்பாக, கிராமப்புறங்களில் சாதிய அடையாளங்களின் அடிப்படையில் ஊர், காலனி என மக்களின் வாழ்விடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இந்த நிலையில், தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் சி.பி.எம் சார்பில் வெற்றிபெற்ற ஒரேயொரு இடதுசாரி வேட்பாளரான, மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் ஒரு முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

கேரள பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் நலன், தேவஸ்தானம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் என்ற முறையில் கே.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், “பட்டியலின மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் குறிப்பிட `காலனி, சங்கேதம், ஊரு’ ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற வார்த்தைகள் அவமரியாதையை ஏற்படுத்துவதால், காலத்துக்கேற்ப புதிய பெயர்களை வைப்பதே பொருத்தமாக இருக்கும். எனவே, அத்தகைய வார்த்தைகளுக்குப் பதில், `நகர், உன்னதி, பிரகிருதி’ போன்ற புதிய வார்தைகளை பயன்படுத்தி அப்பகுதிகளை குறிப்பிட வேண்டும். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிராந்திய நலன் சார்ந்த பெயர்களையும் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கே.ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.ராதாகிருஷ்ணன், “இந்த விவகாரம் தொடர்பாக சில காலமாகவே விவாதங்கள் நடைபெற்று வந்தது. தற்போது இறுதியாக இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் வழக்கத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. காலனி என்ற வார்த்தை காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே, இந்த பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கிடையில், அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடமும், எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடமும் ஒப்படைத்த கே.ராதாகிருஷ்ணன், மிகுந்த திருப்தியுடன் பதவி விலகுவதாகத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *