மேற்கு வங்க மாநிலத்தின் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுகேந்து சேகர் ரே (75) மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்குகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். இது மேற்குவங்க அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு மோப்ப நாய் அனுப்பப்பட்டதாக எம்.பி சுகேந்து சேகர் ரே தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்கள் குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுகேந்து சேகர் ரே-க்கு கொல்கத்தா காவல்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அந்த சம்மனில், “கொலை சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு மோப்ப நாய் அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. சம்பவம் நடந்த அன்றே அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி இரண்டு முறையும், பின்னர் 12-ம் தேதியும் மோப்ப நாய் அனுப்பப்பட்டது. எனவே தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக எம்.பி சுகேந்து சேகர் ரே பதிலளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.