மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 29-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் மீதான விவாத உரையில், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருக்ஷேத்திரத்தில் அபிமன்யுவின் “சக்ரவியூகத்தில்’ ஆறு பேர் சிக்கினர்.
நான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில் சக்ரவியூகத்துக்கு ‘பத்மவியூகம்’ அதாவது தாமரை என்றும் பெயர் உண்டு என்பதை அறிந்து கொண்டேன். இந்த 21-ம் நூற்றாண்டில், ஒரு புதிய ‘சக்கரவியூகம்’ உருவாகியிருக்கிறது. அதுவும் ஒரு தாமரையின் வடிவத்தில். அதன் மையத்தில் ஆறு பேர் உள்ளனர். மோடி, அமித் ஷா , மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி,” என மத்திய பா.ஜ.க கூட்டணி அரசைக் கடுமையாகத் தாக்கியிருந்தார். அது சமுக வலைதளங்களிலும் விவாதமானது.