இ.வி.எம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவிவருகிறது. இ.வி.எம் எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற கருத்தை ஒரு சாரார் முன்வைக்க, இ.வி.எம்-மில் மோசடி நடப்பதற்கு வாய்ப்பே இல்லையென்று மற்றொரு சாரார் வாதிட்டுவருகிறார்கள்.
இந்த நிலையில்தான், அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ-வான எலான் மஸ்க், ‘மனிதர்கள் மூலமாகவோ, ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாகவோ ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற கருத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பரபரப்பைப் பற்றவைத்தார்.
எலான் மஸ்க்கின் இந்தக் கருத்தை முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுத்தார். அவர், ‘பாதுகாப்பான ஹார்டுவேர்ளை உருவாக்க முடியாது என்று பொதுப்படையாகக் கூறுவது தவறு. எலான் மஸ்க்கின் பதிவு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.
காரணம், அங்கு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணையத் தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவை, பிற தொலைத்தொடர்பு சாதனங்களுடனும் இணைப்பில் இல்லை. மேலும், ‘ப்ளூடூத்’, ‘வைஃபை’யில் இவற்றை இணைக்க முடியாது’ என்று கூறினார். ராஜீவ் சந்திரசேகரின் இந்த மறுப்புக்கு பதிலளிக்கும் வகையில், ‘எதையும் ஹேக் செய்யலாம்’ என்று எலான் மஸ்க் பதில் கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரத்தை ‘இந்தியா’ கூட்டணி கையிலெடுத்திருப்பதால், தேசிய அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இ.வி.எம் எந்திரங்களை அகற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும், ‘இந்தியாவில் இ.வி.எம் எந்திரங்களை ஆய்வுசெய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால், நம்முடைய ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. தேர்தல் நடைமுறையில் இருக்கும் வெளிப்படைத்தன்மை குறித்து ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்,மோசடி மூலம் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும் ஆபத்து இருக்கிறது’ என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘சிக்கல்களை நீக்குவதுதான் தொழில்நுட்பம். ஆனால், பிரச்னைகளுக்கு காரணமாக தொழில்நுட்பம் அமைந்தால், அதன் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் பல தேர்தல்களில் இ.வி.எம் எந்திரங்கள் சேதமடையும் அபாயங்கள் இருக்கும்போதும், அந்த ஆபத்துக்களை பிரபல தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியிருக்கும்போது, இ.வி.எம் எந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் பா.ஜ.க ஏன் ஆர்வம் காட்டுகிறது. இது குறித்து பா.ஜ.க தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
சிவசேனா (உத்தவ்) தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி, ‘இது மிக உயர்ந்த மட்டத்தில் நடக்கும் ஒரு மோசடி. இன்னும் தேர்தல் ஆணையம் தூங்குகிறது’ என்று விமர்சித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வட மேற்கு மக்களவைத் தொகுதியின் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் வேட்பாளர் ரவீந்திர வைக்கார் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பதும், அந்த வேட்பாளரின் உறவினரான மங்கேஷ் பாண்டில்கர் என்பவர் வாக்குப்பதிவு எந்திரத்தை செல்போன் மூலமாக ஹேக் செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டும் கடும் சர்ச்சையாகியிருக்கிறது.
இந்த நிலையில், ‘செல்போன் மூலம் வாக்குப்பதிவு எந்திரம் ஹேக் செய்யப்பட்டது என பரவும் தகவல் பொய்யானது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்செல் ஓடிபி மலமாக வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியாது. இது குறித்து பரவிய செய்திகள் தவறானவை’ என்று மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரியான வந்தனா சூரியன்ஷி மறுத்திருக்கிறார்.
இ.வி.எம்-கள் குறித்து தேர்தலுக்கு முன்பிருந்தே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சந்தேகங்களைக் கிளப்பிவருகின்றன. தற்போது எலான் மஸ்க்கின் கருத்தும், மும்பை வட மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு விவகாரமும் இ.வி.எம் குறித்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றன,
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88