கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காஸா நிலைகுலைந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், நிலமற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில், ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “காஸாவில் 10 பேரில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயரும் பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பாதுக்காப்பான இடத்தைத் தேடி செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் உடமைகள், பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகளுக்காக மீண்டும் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.