ஹேமா கமிஷன் விசாரணை அறிக்கை வெளியாகி, மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. “சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்கள் காம்பர்மைஸ், அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலைதான் உள்ளது. பாலியல் இச்சைகளுக்காக பலரும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், ப்ரோடக்ஷன் கன்ட்ரோலர் என யாரிடமிருந்தும் பாலியல் தொல்லைகள் ஏற்படலாம். வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளும் காஸ்டிங் கவுச் சினிமாத்துறையில் உள்ளது. நடிகைகள் தங்கும் ஹோட்டல் அறைகளின் கதவுகளை இரவு நேரத்தில் தட்டுவது சினிமாத்துறை ஆண்களின் வழக்கமாகும். இது பற்றி போலீஸிடமோ, கோர்ட்டிலோ கூறினால் உயிருக்கு ஆபத்தாகும் நிலை உள்ளது. சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா உள்ளது. இவர்கள் மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர். இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் இந்தத் துறையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் படைத்த மாஃபியாவாக இவர்கள் உள்ளனர். இந்த பவர் குரூப்புக்கு எதிராக பேசவோ செயல்படவோ செய்தால் சினிமா துறையில் இருந்து விலக்கி வைக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்பு தளங்களில் மது போதையிலும் போதை பொருள்களையும் பயன்படுத்தியும் வரும் நடிகர்களால் பாலியல் அத்திமீறல்கள் அதிகமாக நடக்கிறது” என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கையில் தனிப்பட்ட நபர்கள் குறித்து நடிகைகள் நேரடியாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குமூலம் அளித்த நபர்களின் பெயர்களோ, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயரோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்த விவாதத்தில் சிலரது பெயர்கள் வெளிப்பட்டு வருகின்றன.
பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான `AMMA’ அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நடிகர் சித்திக். இதையடுத்து ஹேமா கமிஷன் அறிக்கை குறித்த அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், “2019-ம் ஆண்டு ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நான்கரை ஆண்டுகளாக, நடவடிக்கை எடுக்காமல் அடைகாத்துக்கொண்டிருந்ததன் காரணம் என்ன… யாரை காப்பாற்ற அரவு முயல்கிறது” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இதற்கு முன்பும் நடிகைகளின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
போக்சோ உள்ளிட்ட வழக்குகள் போடும் அளவுக்கு குற்றங்கள் நடந்துள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் தெரியவரும் நிலையில், அரசு புகார் இல்லாமலேயே நடவடிக்கை எடுக்கலாமே என எதிர்கேள்வி எழுந்தது. சட்டப்படி புகார் இல்லாமலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை மையமாகக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவறு செய்த ஒருவரையும் அரசு பாதுகாக்காது. தவறு செய்தவர்களை பாதுகாக்கும் யாரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இது சம்பந்தமாக தேவையான விஷயங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் அளிக்காமலேயே நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து போலீஸ் மற்றும் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்க உதவி தேவைப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். முன் மாதிரியாக இந்த கமிட்டியை அமைத்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான அரசு. எனவே அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அரசு நின்றது. இது குறித்து கோர்ட்டும் விசாரித்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட விஷயங்கள் பரிசோதிக்கப்படும்” என்றார்.