ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியிடம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைக்க தெலுங்கு தேசக் கட்சி முக்கிய கூட்டணியாக விளங்குகிறது. இந்த நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ரகசிய மாளிகை கட்டியிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மாரெட்டி செய்தியாளர்களிடம், “விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டிருக்கும் ருஷிகொண்டா அரண்மனையின் ஆடம்பரங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ரூ.26 லட்சம் மதிப்பிலான குளியல் தொட்டி, ரூ.10 முதல் ரூ.12 லட்சம் மதிப்பிலான கமோட், உயர்தர மசாஜ் டேபிள் பொருத்தப்பட்ட ஸ்பா அறை என ஏராளமான ஆடம்பர செலவு செய்யப்பட்டிருக்கிறது. படுக்கையறைக்குள் ஒரு மசாஜ் மேசையைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன்.
ஆந்திரப் பிரதேசம் ரூ.12 லட்சம் கோடி கடனில் உள்ள நிலையில், மாநிலத்தின் மோசமான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டிருந்தால், இத்தகைய பொருத்தமற்ற செலவுகள் தேவையா என முடிவு செய்திருக்கலாம். இந்த கட்டுமானங்களுக்கான ஒப்பந்தம் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான தேவி ரெட்டி ஸ்ரீநாத் ரெட்டிக்கு வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கண்டா ஸ்ரீனிவாஸ் இந்த மாளிகையை பார்வையிட்ட பின், “விசாக்கப்பட்டினத்தில் கடலை பார்த்தவாறு கட்டப்பட்ட இந்த ரகசிய மாளிகை ஜெகனின் முகாம் அலுவலமாக மாற்றுவதற்காக தயாராகி வந்துள்ளது. இந்த அலுவலகமும், இடமும் அரசுக்குரியது. பார்ப்பதற்கு சதாம் உசேன் அரண்மனை போல் உள்ளது. இதன் கட்டுமான செலவுகள், ஒப்பந்த விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த மாளிகையை கட்டுவதற்காக ருஷிகொண்டாவில் ஆண்டுக்கு ரூ.8 கோடி வரை வருமானம் ஈட்டித் தந்த அரசின் சுற்றுலா ரிசார்ட்டுகள் இடிக்கப்பட்டுள்ளன. நல்லவேளையாக கடவுள் இந்த முறை ஆட்சியை அவர்களுக்கு கொடுக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த மாளிகை தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் தொழில்துறை அமைச்சருமான அமர்நாத், “விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவித்தால் பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற விருந்தினர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது கட்டப்பட்டது. இது முதல்வர் முகாம் அலுவலகமல்ல. அது அரசின் சொத்து. எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானதுமல்ல.” என பதிலளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb