இந்தியாவில் நடந்துமுடிந்த 2024 பொதுத் தேர்தலில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடியே தொடர்கிறார்… இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி ஏற்படும் வகையிலான பல விஷயங்கள் நடந்தேறின. அதில் எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த மிக முக்கிய விவகாரங்களுள் ஒன்று, `ஹிண்டன்பர்க்” அறிக்கை எனச் சொன்னால், நிச்சயம் மிகையல்ல…
கடந்த 2023-ம் ஆண்டு, இந்திய அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது `ஹிண்டன்பர்க்’ அறிக்கை. அதானி குழுமம் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஜனவரி மாத சமயத்தில் அறிக்கை வெளியிட்டது. பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமப் பங்குகள் கடுமையாகச் சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை இழந்தன. அதானி குழுமத்துக்குப் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியிருப்பதாலும், பொதுத்துறை நிறுவனங்கள் பல அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்திருப்பதாலும் அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்தது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த காலத்திலிருந்தே கௌதம் அதானிக்கும் மோடிக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. மோடியின் மூலம் தொழில்ரீதியான ஆதாயங்களை கௌதம் அதானி அடைந்திருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்தன. தொடர்ச்சியாக இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியும், அவ்வப்போது போராட்டங்களும் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இடையில் செபி குறித்தும் ஹிண்டன்பர்க் நிறுவனம் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தது.