துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும்போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை துப்பாக்கியை வைத்திருந்தது என மூன்று வழக்குகள் அவர்மீது தொடரப்பட்ட நிலையில், மூன்றிலும் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்க 12 பேர் கொண்ட தலைமை நிதிபதிகள் (ஜூரிக்கள்) குழு அமைக்கப்பட்டது, அவர்கள் நடத்திய தீவிர ஆலோசனையின் இறுதியில்தான் அவர்கள் ஹண்டர் பைடன் குற்றவாளி என முடிவெடுத்தனர்.
இதில் முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என, அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாள்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும், “அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர், குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தீர்ப்பு வாசிக்கப்படும்போது ஹண்டர் பைடனின் மனைவி மெலிசா கோஹன் நீதிமன்ற அறையில்தான் இருந்தார். இரு தரப்பு வாதமும் நேற்று நிறைவடைந்து, மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி மேரிலென் நோரிகா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் தனது மகன் குற்றவாளி என தீர்ப்பு வந்தால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அதிபர் பைடன் முன்னதாகவே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.