INDIA VS NDA : முக்கிய 12 மாநிலங்கள் எந்தக் கூட்டணிக்கு கை கொடுத்திருக்கிறது?! 2019 vs 2024 Analysis

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகளும் வெளியாகியிருக்கின்றன. 28 மாநிலங்களின் தொகுதிகளிலிருந்தும், 8 யூனியன் பிரதேசங்களின் தொகுதிகளிலிருந்தும் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில், 8,337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல்

இந்திய அரசியலைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட 12 மாநிலங்களின் தேர்தல் முடிவே மத்தியில் யாருடைய ஆட்சி அமையும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் உள்ளன.

ஆனால், 350 தொகுதிகள் என்ற இலக்கை நிர்ணயித்து பயணித்த மோடி தலைமையிலான பா.ஜ.க 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சூழலில் சிக்கியிருக்கிறது. காங்கிரஸ் 99 இடங்களை வென்ற நிலையில், இந்தியா கூட்டணி மொத்தம் 232 தொகுதிகளை வென்றிருக்கிறது.

மோடி – ராகுல் காந்தி

எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாததால், ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (TDP) 16 தொகுதிகளும், பீகாரின் நிதிஷ் குமாரின் JD(U) 12 தொகுதிகளும், மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார்? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியைப் போலவே, இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியும், என்.டி.ஏ கூட்டணி தேர்தலை எதிர்க்கொண்டன. எனவே, இந்த இரண்டு தேர்தல்களையும், குறிப்பிட்ட அந்த 12 மாநிலங்களின் தேர்தல் நிலவரத்துடன் ஒப்பிட்டால், எந்த மாநிலம் எந்த கூட்டணிக்கு கை கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம், இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் மாநிலமாகும். 2019-ம் ஆண்டு தேர்தலின்போது என்.டி.ஏ கூட்டணில் இடம்பெற்ற பா.ஜ.க., 49.5 சதவிகித வாக்குகளைப் பெற்று, 62 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற அப்னா தள் (சோனேலால்) கட்சி, 1.2 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டு இடங்களில் வென்றது. அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, 17.96 சதவிகித வாக்குகளுடன் ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வென்று, 19.23 சதவிகித வாக்குகளை அறுவடை செய்தது. 67 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 6.3 சதவிகித வாக்குகளுடன் ஓரிடத்தில் மட்டுமே வென்றது.

உத்தரப்பிரதேசம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியுடன் இணைந்த சமாஜ்வாடி கட்சி 33.59 சதவிகித வாக்குகளைப் பெற்று, 37 இடங்களையும், காங்கிரஸ் 9.46 சதவிகித வாக்குகளை பெற்று 6 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க 41.37 சதவிகித வாக்குகளைப் பெற்று, 33 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக்தளம் இரண்டு தொகுதிகளிலும், அப்னா தள் ஒரு தொகுதியிலும் வென்றிருக்கிறது. கடந்த முறை 49.5 சதவிகித வாக்குகளைப் பெற்ற பாஜக இந்த முறை 41.37 சதவிகித வாக்குகளை தான் பெற முடிந்திருக்கிறது. கணிசமான இடங்களையும் இழந்திருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலில், 48 தொகுதிகள் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 27.59 சதவிகித வாக்குகளைப் பெற்று, 23 இடங்களில் வென்றது. அந்தக் கூட்டணியில் அப்போது இடம்பெற்ற சிவசேனா கட்சி, 23.29 சதவிகித வாக்குகளுடன் 18 இடங்களில் வெற்றிபெற்றது.

UPA கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 15.52 சதவிகித வாக்குகள் பெற்று, நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. அதே சமயம் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 16.27 சதவிகித வாக்குகள் பெற்று, ஓரிடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

மகாராஷ்டிரா

ஆனால், இந்த தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியக் கட்சியான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி ஆதரவு உத்தவ் தாக்ரே அணி, சரத் பவார் அணி எனவும், என்.டி.ஏ கூட்டணி ஆதரவு ஏக்நாத் ஷிண்டே அணி, அஜித் பவார் அணி என இரண்டாகப் பிரிந்து தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டன. இதில், இந்தியா கூட்டணி ஆதரவு சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி) 16.72 சதவிகித வாக்குகளைப் பெற்று, 6 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 10.27 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றி 8 இடங்களையும், காங்கிரஸ் 16.92 சதவிகித வாக்குகளைப் பெற்று 13 இடங்களையும் வென்றிருக்கின்றன.

என்.டி.ஏ கூட்டணி ஆதரவு சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) 12.95 வாக்குகளைப் பெற்று, 7 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 3.60 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்திலும், பா.ஜ.க 26.17 சதவிகித வாக்குகளையும் அறுவடை செய்து, 9 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

42 தொகுதிகள் இருக்கும் மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 2019 தேர்தலில், 43.28 சதவிகித வாக்குகளுடன் 22 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 5.61 சதவிகித வாக்குகளைப் பெற்று, இரு இடங்களில் வெற்றிபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 6.28 சதவிகித வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.4 வாக்கு சதவிகித வாக்குகளையும் பெற்றது. ஆனால் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 40.25 சதவிகித வாக்குகள் பெற்று,18 இடங்களில் வெற்றிபெற்றது.

மேற்கு வங்கம்

ஆனால், இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து இந்தியா கூட்டணியில் ஐக்கியமாகின. இதில், திரிணாமுல் மட்டும் தனித்துக் களம் கண்டது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் 45.76 சதவிகித வாக்குகளைப் பெற்று, 29 இடங்களையும், காங்கிரஸ் 4.68 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 5.67 சதவிகித வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.22 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால் இரு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. பா.ஜ.க 38.73 சதவிகித வாக்குகளைப் பெற்று 12 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. கடந்த முறை 18 இடங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரின் 40 தொகுதிகளில் 2019-ம் ஆண்டு தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 23.58 சதவிகித வாக்குகளைப் பெற்று 17 இடங்களில் வென்றிருக்கிறது. நிதிஷ் குமாரின் JD(U) 21.81 சதவிகித வாக்குகளைப் பெற்று 16 இடங்களில் வென்றது. UPA கூட்டணியில் காங்கிரஸ் 7.7 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் வென்றது. 15.36 சதவிகித வாக்குகளைப் பெற்ற லாலு பிரசாத் தலைமையிலான RJD, ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

பீகார்

இந்த தேர்தலில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 20.52 சதவிகித வாக்குகளைப் பெற்று 12 இடங்களில் வென்றிருக்கிறது. நிதிஷ் குமாரின் JD(U) 18.52 சதவிகித வாக்குகளைப் பெற்று 12 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 9.20 சதவிகித வாக்குகளைப் பெற்று, 3 தொகுதிகளிலும், 22.14 சதவிகித வாக்குகளைப் பெற்ற RJD, 4 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கும் இருமுனைப் போட்டியாகவே… அதாவது, தி.மு.க Vs அ.தி.மு.க என்றுதான் இருந்திருக்கிறது. கடந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தமிழ்நாடு

தி.மு.க, 32.7 சதவிகித வாக்குகளைப் பெற்று 23 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12.76 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.44 சதவிகித வாக்குகளைப் பெற்று இரு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2.4 சதவிகித வாக்குகளைப் பெற்று இரு இடங்களிலும் வென்றன. வி.சி.க 1.18 சதவிகித வாக்குகள் பெற்றும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவிகித வாக்குகள் பெற்றும் தலா 1 இடத்தில் வெற்றிபெற்றன.

என்.டி.ஏ கூட்டணியில் இருந்த அ.தி.மு.க 19.39 சதவிகித வாக்குகளை பெற்று ஓரிடத்திலும், பா.ஜ.க 3.66 சதவிகித வாக்குகளையும், பாட்டாளி மக்கள் கட்சி 5.42 சதவிகித வாக்குகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் 0.52 சதவிகித வாக்குகளையும் பெற்றன. ஆனால் ஓரிடத்தில்கூட வெற்றிப்பெறவில்லை.

இந்த நாடாளுமன்றத் தேர்தல், நான்குமுனைப் போட்டியாக களம் சூடுபிடித்திருந்தது. இதில், இந்தியா கூட்டணியில் இருக்கும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 39 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்திருக்கின்றன. தி.மு.க 26.93 சதவிகித வாக்குகளுடன் 22 இடங்களிலும், காங்கிரஸ் 10.06 சதவிகித வாக்குகளுடன் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2.15 சதவிகித வாக்குகளுடன் 2 இடங்களிலும், சி.பி.ஐ(எம்) 2.52 சதவிகித வாக்குகளுடன் 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.06 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்திலும், வி.சி.க, 2 இடத்திலும், ம.தி.மு.க 1 இடத்திலும் வென்றிருக்கின்றன.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான்

என்.டி.ஏ கூட்டணியைவிட்டு விலகி தனித்து கூட்டணி அமைத்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க, 20.46 சதவிகித வாக்குகளையும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க 2.59 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க 11.24 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. நாம் தமிழர் கட்சி உட்பட இந்த கட்சிகள் அனைத்தும் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க 58 சதவிகித வாக்குகளைப் பெற்று, 28 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சி 34.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அஇந்த தேர்தலில், பா.ஜ.க 59.27 சதவிகித வாக்குகளைப் பெற்று, 29 இடங்களிலும் வென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 32.44 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தாலும், எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

மத்தியப் பிரதேசம்

28 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் கர்நாடகாவில், கடந்த முறை தேர்தலின்போது என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 51.38 சதவிகித வாக்குகள் பெற்று, 25 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 31.88 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஓரிடத்திலும், கடந்த முறை காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சி 9.67 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்திலும் வென்றது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை, இந்த தேர்தலில் முறித்துக்கொண்ட ஜனதா தளம் (மதச்சார்பற்ற) என்.டி.ஏ கூட்டணியில் பங்குகொண்டது. இந்த முறை பா.ஜ.க 46.06 சதவிகித வாக்குகள் பெற்று, 17 இடங்களிலும், என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சி 5.60 சதவிகித வாக்குகளை பெற்று 2 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 45.43 சதவிகித வாக்குகளைப் பெற்று, 9 இடங்களில் வென்றிருக்கிறது.

கர்நாடகா

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. சென்ற முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, அனைத்துத் தொகுதிகளிலும் வென்று, 62.21 சதவிகித வாக்குகளை அறுவடை செய்தது. 26 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 32.11 வாக்குகளைப் பெற்றது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலிலும் பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிப்பெற்று, 61.86 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்று 31.24 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது.

2019-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில், 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க, 58.47 சதவிகித வாக்குகளைப் பெற்று, 24 இடங்களில் வென்றது. கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியிலிருந்த ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி 2.03 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் வென்றது. காங்கிரஸ் 34.24 சதவிகித வாக்குகளைப் பெற்றும், ஓரிடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.

ராஜஸ்தான்

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி 1.80 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தில் வென்றிருக்கிறது. காங்கிரஸ் 37.91 சதவிகித வாக்குகளை பெற்று 8 இடங்களில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. சிபிஐ(எம்) 1.97 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தில் வென்றது. என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க 49.24 சதவிகித வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. வென்ற இடங்கள் 14.

ஆந்திரப் பிரதேசத்தின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி 49.89 சதவிகித வாக்குகளைப் பெற்று 22 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை, 1.29 சதவிகித வாக்குகளைப் பெற்று, எங்கும் வெற்றிபெறவில்லை. தெலுங்கு தேசம் கட்சி 39.59 சதவிகித வாக்குகள் பெற்று மூன்று இடங்களில் வென்றது. பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 5.79 சதவிகித வாக்குகள் பெற்றும், பா.ஜ.க 0.96 சதவிகித வாக்குகளைப் பெற்றும் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

ஆந்திரா

மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று கட்சிகளும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் மூன்று கட்சிகளும் என்.டி.ஏ கூட்டணியில் ஒன்றாகக் களம் கண்டன. இதில், தெலுங்கு தேசம் கட்சி 37.79 சதவிகித வாக்குகள் பெற்று 16 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 11.28 சதவிகித வாக்குகள் பெற்று 3 இடங்களிலும் வென்றிருக்கின்றன. கூட்டணியில் இடம்பெறாமல் தனித்து களம்கண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி 39.61 சதவிகித வாக்குகளைப் பெற்று 4 இடங்களில் மட்டும் வென்றிருக்கிறார். காங்கிரஸ் வெறும் 2.66 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. எதிலும் வெற்றிப்பெறவில்லை.

கேரள மாநிலத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கடந்த முறை UDF, NDA, LDF ஆகிய மூன்று கூட்டணிகளில் அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. UDF கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. NDA கூட்டணியில் பாஜக, பாரத தர்ம ஜன சேனா ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. LDF கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி 25.83 சதவிகித வாக்குகளுடன் ஓரிடத்தில் வென்றது.

கேரளா

காங்கிரஸ் 37.27 சதவிகித வாக்குகளுடன் 15 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5.45 சதவிகித வாக்குகளுடன் இரு இடங்களில் வெற்றிபெற்றது. புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 2.45 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் வெற்றிபெற்றது. கேரள காங்கிரஸ் (எம்) 2.07 சதவிகித வாக்குகளுடன் ஓரிடத்தில் வென்றிருக்கிறது. அதேபோல பா.ஜ.க 12.93 சதவிகித வாக்குகளைப் பெற்றும், பாரத தர்ம ஜன சேனா கட்சி 1.87 சதவிகித வாக்குகளைப் பெற்றும் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியின் சிபிஐ (எம்) 25.82 சதவிகித வாக்குகள் பெற்று ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் 35.06 சதவிகித வாக்குகள் பெற்று 14 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6.07 சதவிகித வாக்குகள் பெற்று 2 தொகுதிகளிலும், கே.இ.சி, ஆர்.எஸ்.பி கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றிப்பெற்றிருக்கின்றன. பா.ஜ.க 16.68 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தில் வென்றிருக்கிறது.

தெலங்கானாவின் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில், 2019-ன் நாடாளுமன்றத் தேர்தலில், பாரத ராஷ்டிர சமிதி கட்சி 41.29 சதவிகித வாக்குகளைப் பெற்று, 9 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 29.48 சதவிகித வாக்குகளைப் பெற்று 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாஜக 19.45 சதவிகித வாக்குகளைப் பெற்று 4 தொகுதிகளில் வெற்றிகொண்டது. அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஓரிடத்தில் வென்று, 2.78 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

தெலங்கானா

இந்த தேர்தலில், பாரத ராஷ்டிர சமிதி கட்சி 16.68 சதவிகித வாக்குகளைப் பெற்றும் எந்த தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 40.10 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளிலும், பா.ஜ.க 35.08 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளில் வென்றிருக்கிறது. அசாதுதீன் ஒவைசியின் கட்சி 3.02 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *