இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதில், ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் புஆத் ஷூக்ர் சில நாள்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் இரான் நாட்டில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
இதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு (இன்று) ஞாயிற்றுக்கிழமை காலை 06:00 மணி முதல் நாடு தழுவிய 48 மணிநேர அவசரகால நிலையை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லேண்ட் (Yoav Gallant), “ஹிஸ்புல்லாவின் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை வந்திருப்பதின் அடிப்படையில், அவசரகால நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலில் கூட்டங்களை கட்டுப்படுத்துதல், மக்கள் கூடும் தளங்களை மூடுதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருகின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.