Israel: காஸா, ஏமன், லெபனான் நகரங்கள்மீது இஸ்ரேல் தாக்குதல்; 15-க்கும் மேற்பட்டோர் பலி… பதற்றம்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடங்கிய போரில் தற்போது வரை சுமார் 39,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 89,622 போ் காயமடைந்துள்ளனர். சர்வதேச நீதிமன்ற எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை, உலக நாடுகளின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாத இஸ்ரேல், தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. பாலஸ்தீன சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்வதால் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு அகதிகள் முகாம்களில் அடைக்கலமானார்கள்.

இஸ்ரேல் – பாலஸ்தீன போர்

ஆனால் இஸ்ரேல், அகதிகள் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் நுஸ்ரத் அகதிகள் முகாமின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏமனின் ஹூதி குழுவினர், இஸ்ரேலின் டெல்-அவிவ் மீது டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்… பலர் காயமடைந்தனர். இத்தகைய சூழலில், ஏமனின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையம், மின் உற்பத்தி நிலையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில், மூன்று பேர் கொல்லப்பட்டனர், 87 பேர் காயமடைந்தனர்.

தெற்கு லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளிலிருந்ததை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் பல வீடுகளை இடித்து காஸா மேற்குக் கரையில் அதிக நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம், “ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேல் தொடர்ந்து இருப்பது சட்டவிரோதமானது. விரைவில் இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மீது இஸ்ரேலுக்கு உரிமை இல்லை. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது” எனக் கண்டித்தது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகள் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட அழைப்பு விடுத்தன. இந்த நிலையில்தான், இஸ்ரேலிய தாக்குதல்கள் அகதிகள் முகாம்கள் மீது தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *