இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் நடந்து வரும் போரில், இரானில் ஹமாஸ் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இரானின் புரட்சிகர காவலர் படை, இஸ்ரேலை பழிதீர்க்க சபதம் எடுத்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இரானில் இருக்கும் ஹிஸ்புல்லா குழுதான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதை ஹிஸ்புல்லா குழு மறுத்தது. ஆனாலும், அதற்குப் பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை லெபனானின் தெற்கு பெய்ரூட் நகரில் தாக்குதல் நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரான ஃபுஆத் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார். இதற்கு எதிர்த் தாக்குதலாக சனிக்கிழமை ஹிஸ்புல்லா இஸ்ரேலின் மோஷவ் பெய்ட் ஹில்லெல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பொதுமக்கள் காயமடைந்ததாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவால் ஏவப்பட்ட பெரும்பாலான ராக்கெட்டுகளை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான டோம் அமைப்பு இடைமறித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலிய அதிகாரிகள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தீ பரவியதாக தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா, இஸ்ரேலின் பாதுகாப்பை அதிகரிக்க இஸ்ரேலில் இருக்கும் தனது குடிமக்களை பாதுகாக்கவும், மத்திய கிழக்கில் தனது ராணுவ உதவிகளை அதிகரிப்பதாகவும் கூறியிருக்கிறது.
மேலும், நிலைமை விரைவில் மோசமடையக்கூடும் என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி எச்சரித்ததைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகம், புதிய போர் ஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உடனடியாக அமெரிக்கர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதே போலவே, ஜோர்டான், கனடா, இந்தியா உட்பட பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு லெபனானை விட்டு விரைவில் வெளியேறுமாறு அறிவுரைகளை வழங்கியுள்ளன.