`IT துறையில் 14 மணிநேர வேலை மசோதா கொண்டுவர தொழிலதிபர்கள் அழுத்தம் தருகிறார்கள்!' – கர்நாடக அமைச்சர்

இந்தியாவில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு. இந்த மாநிலத்தில், கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா கொண்டுவரவிருப்பதாக அறிவித்தபோது, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் அந்தத் திட்டத்தை அரசும் தள்ளிப்போட்டது.

IT

இவ்வாறிருக்க, ஐ.டி (IT) நிறுவனங்களின் வேலை நேரத்தை 12 (ஷிஃப்ட்)+2 (ஓவர் டைம்) என 14 மணிநேரமாக்குமாறு சில ஐ.டி நிறுவனங்கள் கூட்டாக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. `ஐ.டி நிறுவனங்கள் இந்த 14 மணிநேர வேலை முறை கொண்டுவந்தால், தற்போது 8+8+8 எனும் மூன்று ஷிஃப்ட் முறை இரண்டாக மாறும். இதனால் மூன்று மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களின் வேலை பறிபோகும்‘ என்று ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், 14 மணிநேர வேலை நடைமுறைப்படுத்துவதற்கான மசோதாவைக் கொண்டுவருமாறு தொழிலதிபர்கள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக மாநில தொழிலாளர் நலன் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியிருக்கிறார்.

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அமைச்சர் சந்தோஷ் லாட், “ஐ.டி தொழில்துறையினரின் அழுத்தம் காரணமாக இந்த மசோதா எங்களிடம் வந்திருக்கிறது. இதனை ஐ.டி அமைச்சர் பிரியங்க் கார்கே கொண்டுவரவில்லை. இதற்காகத் தொழிலதிபர்கள் எங்களிடம் அழுத்தம் கொடுக்கின்றனர். தொழிலாளர் துறையின் கண்ணோட்டத்தில் அதை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம். மேலும், இந்த பிரச்னை பொது களத்தில் இருப்பதால் அனைத்து தொழில்துறை தலைவர்களும் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

IT அமைச்சர் பிரியங்க் கார்கே – அமைச்சர் சந்தோஷ் லாட்

மக்களும் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க சுதந்திரமாக இருக்கின்றனர். இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்திருப்பதால் ஐ.டி ஊழியர்கள் மத்தியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் இதில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பின்னர், அதனடிப்படையில் ஒரு துறையாக, நிச்சயமாக இதன் பிரச்னையை நாங்கள் கவனிப்போம். அதுமட்டுமல்லாமல், இப்போது, ​​தொழிற்சங்கத்திலிருந்து இதில் கருத்து வேறுபாடு வருகிறது. ஆனால், ஐ.டி நிறுவன தலைவர்கள் இதைப் பற்றி ஏன் பேசுவதில்லை… கருத்து நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்பதை இறுதியில் அரசாங்கம் பரிசீலிக்கும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *