Jaganmohan Reddy: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்கு! – பின்னணி என்ன?

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது தெலுங்கு தேசம் கட்சியின் உண்டி எம்.எல்.ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜு காவல் நிலையத்தில் கொலை முயற்சிப் புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் புகாரில், “மே 14, 2021 அன்று நான் சி.ஐ.டி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டேன். ஆனால், சி.ஐ.டி அதிகாரிகளிடம் கைது வாரன்ட்டும் இல்லை. கைது செய்வதற்கான முறையான எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.

ரகுராம கிருஷ்ணா ராஜு

கைதுசெய்யப்பட்ட பிறகு உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பும் என்னை ஆஜர்படுத்தவில்லை. சட்டவிரோதமாக காவல்துறை வாகனத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டேன். அதே இரவு வலுக்கட்டாயமாக குண்டூருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். காவல்துறை அதிகாரிகள் என்னை பெல்ட்டால், தடிகளால் தாக்கினார்கள். எனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிந்தும், இதய நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை. சில அதிகாரிகள் மார்பில் அமர்ந்து என்னைக் கொல்லும் முயற்சியில் அழுத்தம் கொடுத்தார்கள்.

என் செல்போனின் பாஸ்வேர்ட் கேட்டு தாக்கினார்கள். என் உடல்நிலை மோசமானதால், அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு மருத்துவர் பிரபாவதி எனக்கு மோசமான சிகிச்சையளித்தார். காவல்துறை அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் மருத்துவர் போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கினார். மேலும், அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்தால் கொலை செய்து வடுவதாக பி.வி.சுனில் குமார் மிரட்டினார்.

காவல்துறை

ஜெகன் மோகன் ரெட்டி, பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு ஆகிய இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள், பிற காவல்துறை அதிகாரிகள் எனக்கு எதிராக சதி செய்தனர்.” எனப் புகார் அளித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *